பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

புதுச்சேரியில் ஐஎப்எஸ் அதிகாரி பாலியல் தொல்லை தந்ததாகப் புகார்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி வனத்துறை ஐஎப்எஸ் உயர் அதிகாரி தினேஷ் கண்ணன், பாலியல் தொல்லை தந்ததாக அத்துறையிலுள்ள பெண் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். இதையடுத்து, தினேஷ் கண்ணன் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி கன்சர்வேட்டர் மற்றும் தலைமை வனவிலங்கு வார்டனாக உள்ள ஐஎப்எஸ் அதிகாரி தினேஷ் கண்ணன் கடந்த மாதம் நியமிக்கப்பட்டு கடந்த வாரம்தான் புதுச்சேரியில் பொறுப்பேற்றார். இவர் பாலியல் தொல்லை தந்ததாக உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் அவருக்கு அடுத்த நிலையிலுள்ள பெண் அதிகாரி ஒருவர் புகார் தந்துள்ளார்.

பெண் அதிகாரி அளித்த புகாரில், "செப்டம்பரில் உயர் அதிகாரியாக தினேஷ் கண்ணன் புதுச்சேரியில் பொறுப்பேற்றார். தொடர்ந்து வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்புவது, தேவையில்லாமல் போனில் பேசத் தொடங்கினார். குறுந்தகவலை வாட்ஸ் அப்பில் அனுப்பி அதைப் பார்க்காமல் தவிர்ப்பதைக் கேட்டார். பணி அதிகமுள்ளதால் வாட்ஸ் அப்பில் தகவலைப் பார்ப்பதில்லை என்று தெரிவித்தேன். தொடர்ந்து பணியிடத்திலும் பல பிரச்சினைகள் உருவாகின.

கரோனா காலத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து வந்தபோதும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் அலுவலகம் வந்தார். அதேபோல், எனது அலுவலக அறையை நான் இல்லாதபோது திறந்துள்ளார். அங்கு எனது உடமைகள் இருந்தபோதும், கீழ்த்தரமாக அனுமதி பெறாமல் அறைக்குள் வந்து சென்றிருந்தார். அறைக்குள் தேவையில்லாமல் சாதனங்கள் பொருத்தியதுடன், எனது தனிப்பட்ட குடும்ப விஷயங்கள் பற்றி அறிந்து கேள்வி எழுப்பத் தொடங்கினார். அதற்குப் பதில் தெரிவிக்காததால், தொடர்ந்து மோசமான வார்த்தைகளுடன் பேசத் தொடங்கினார். அதில் பாலியல் ரீதியான நிறம் இருந்தது.

அலுவலக நேரம் தாண்டி எனது தனிப்பட்ட வாழ்வைக் கண்காணிக்கும் விதத்தில் நான் தங்கியிருக்கும் வீட்டைக் கண்டறிந்து நோட்டமிட்டார். அனுமதியின்றி வீட்டருகே வந்ததற்கான ஆதாரங்களும் உள்ளன. பணியிடத்தைத் தாண்டியும் அவரது தொந்தரவு நீண்டது. கடந்த மூன்று நாட்களில் நடந்த நிகழ்வுகளில் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில், பிரிவு 354 ஏ (பெண்களை சீற்றப்படுத்த முயன்றதற்காக தண்டனை) மற்றும் அதிகாரிக்கு எதிராக 354 டி (பின்தொடர்வதற்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் காவல்துறை ஐஎப்எஸ் அதிகாரி தினேஷ் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT