கரோனா பாதிப்பால் கடந்த செப்.13-ம் தேதி தேர்வெழுத முடியாத மாணவர் ஒருவருக்காக கரூரில் நேற்று ஒரு தேர்வு மையம் செயல்பட்டது.
காருடையாம்பாளையம் தனியார் பொறியியல் கல்லூரி தேர்வு மையத்தில் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த மாணவர் குகன் என்பவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
கரோனா பாதித்த மாணவர்களுக்கு வெறோரு நாளில் தேர்வு நடத்தப்படும் என்ற தேசிய தேர்வு முகமையின் அனுமதி கடித நகல் வழங்கப்பட்டதை அடுத்து குகன் வீடு திரும்பினார்.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நேற்று நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வெள்ளக்கோவில் மாணவர் குகனுக்கு கரூர் வேலம்மாள் பள்ளி தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கு நேற்று தேர்வெழுத இவர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கரூர் வேலம்மாள் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வெழுத தன் தாயுடன் குகன் நேற்று காரில் வந்தார். அவரது உடல் வெப்பநிலை குறித்து பாதுகாவலர் அறை அருகில் வெப்பமானி உதவியுடன் பரிசோதித்த பின், கிருமி நாசினி வழங்கப்பட்டது. அதன்பின் குகன் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டார். தனி ஒரு மாணவராக நேற்று கரூர் மையத்தில் நீட் தேர்வை எழுதி முடித்துவிட்டு குகன் சென்றார்.
ஒரு மாணவருக்காக பாதுகாவலர், தேர்வுக்கூட அலுவலர், கண்காணிப்பாளர் என 5-க்கும் மேற்பட்டோர் நேற்று பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல, ஈரோடு மாவட்டம் அரச்சலூரை சேர்ந்த மாணவர் ஒருவர் கரோனா அச்சம் காரணமாக கடந்த மாதம் தேர்வெழுதாத நிலையில், கரூர் வேலம்மாள் பள்ளி தேர்வு மையத்தில் நேற்று நடைபெற்ற நீட் தேர்வுக்கு வந்திருந்தார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திரும்பிச் சென் றார்.