எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் தமிழக முதல்வர் பழனிசாமியை நேற்று நேரில் சந்தித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆறுதல் கூறினர்.
தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) உடல் நலக்குறைவு காரணமாக, சேலத்தில் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர்கள், அரசின் பல்வேறு துறைகளின் செயலர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சிலுவம்பாளையத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், 2-வது நாளான நேற்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன், டிஜிபி-க்கள் சைலேந்திர பாபு, ஜாஃபர் சேட், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் முதல்வரின் இல்லத்துக்கு நேரில் வந்து, அவரது தாயாரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர். முதல்வர் பழனிசாமிக்கு ஆறுதல் கூறினர்.
மேலும், சட்டப்பேரவை தலைவர் தனபால், அமைச்சர் ஓ.எஸ்.மணியன், முன்னாள் அமைச்சர் முத்துசாமி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பலர் முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதனிடையே, முதல்வரின் தாயார் தவுசாயம்மாள், காரியம் (சாங்கியம்) இன்று (15-ம் தேதி) காலை 9 மணிக்கு சிலுவம்பாளையத்தில் நடைபெறும் என முதல்வரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.