மதுரை மாவட்டம், எம். கல்லுப்பட்டி அருகே கோயில் திருவிழாவில் பங்கேற்ற விவசாயி ஒருவர் நேற்று முன்தினம் இரவில் கொலை செய் யப்பட்டார். அவரைக் கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி, உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடியப் போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டம், எம்.கல்லுப்பட்டி அருகே சூலபுரம் கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் (புரட்டாசி) 2 திருவிழாக்கள் நடைபெறும். இதில் சூலப்புரம், உலைப்பட்டி கிராமத்தினர் பங்கேற்பர். கடந்த இரு ஆண்டாகவே திருவிழா கொண்டாடுவதில் இருவேறு சமூகத்தினரிடையே பிரச்சினை எழுந்தது. இந்த ஆண்டு அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, நிபந்தனைகளுடன் விழா நடத்த அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் விழா தொடங்கியது. கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய சூலப்புரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த விவசாயி செல்லத்துரை(43) என்பவர் உலைப்பட்டி சந்தன மாரியம்மன் கோயில் அருகே தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த செல்லத்துரையின் உறவினர்கள் அங்கு திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
எம்.கல்லுபட்டி ஆய்வாளர் தினகரன் மற்றும் போலீஸார் அங்கு சென்று செல்லத்துரையின் உடலை மீட்க முயன்றனர். ஆனால், உறவினர்கள் அவரது உடலை எடுக்க விடாமல் தடுத்து சாலையில் கிடத்தி மறியல் செய்தனர். இதையடுத்து மதுரை டிஐஜி ராஜேந்திரன், எஸ்பி சுஜித்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் நேற்று மதியத்துக்கு மேல் செல்லத்துரையின் உறவி னர்கள், சமூகத்தினர் சம்மதித்த நிலையில், அவரது உடல் உசிலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக செல்லத்துரையின் மனைவி மலர்கொடி கொடுத்த புகாரின்பேரில், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த நல்லாள் மகன் தங்கப்பன், மகாலிங்கம் மகன் அய்யனார், சங்கிலிமுத்து மகன் பன்னீர்செல்வம், கருப் பணன் மகன் காளியப்பன், அழகர் மகன் பாண்டி உட்பட 12 பேர் மீது எம்.கல்லுப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர் களைத் தேடி வருகின்றனர்.
அப்பகுதியில் பதற்றம் நீடிப் பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.