ஆளுநர் மாளிகையில் முறைக்கேடுகள் மலிந்து, இடைத்தரகர்கள் ஆதிக்கம் உள்ளது என ஏற்கெனவே புகார் கூறியும் இதுவரை கிரண்பேடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புகார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மீனவர்களுக்கு ஓய்வூதிய தொகையை உயர்த்த கடந்த ஜனவரியில் ஆளுநர் மாளிகைக்கு கோப்பு அனுப்பினேன். மார்ச் மாதம் வரை ஆளுநர் காலதாமதம் செய்தார். இதனால் உயர்த்தப்பட்ட தொகையை சரண்டர் செய்ய வேண்டியிருந்தது. ஏப்ரல் மாதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க அனுமதியளித்தார். ஒரு மாதம் மட்டும் கொடுத்தோம். மே மோதம் மீண்டும் வழங்க முடியவில்லை. கரோனாவால் வரி வருவாயை சுட்டிக்காட்டி நிதி தர முடியாது என கூறி விட்டனர். ஓய்வூதியம் பெறும் மீனவ முதியோரின் எண்ணிக்கை 7,855 மட்டும்தான். இதற்கு கூடுதலாக ரூ.2 கோடி மட்டும்தான் தேவை.
எனக்கு ஊதியம் வேண்டாம்
நான் கடந்த சில மாதங்களாக ஊதியம், இதர சலுகைத் தொகை எதனையும் வாங்கவில்லை. ஆட்சிக்காலம் முடியும் வரை வாங்குவதாக இல்லை. இதன்மூலம் சுமார் ரூ.80 லட்சம் கிடைக்கும். இதனை அரசு நிதி தேவைக்கு பயன்படுத்தலாம்.
கடந்த 7 மாதமாக மாளிகையை விட்டே கிரண்பேடி வெளியே வரவில்லை. இதற்கு முன்பு இருந்த ஆளுநர்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.3 கோடி மட்டும்தான் செலவிடுவார்கள். ஆளுநராக கிரண்பேடி வந்தபிறகு ரூ.7 கோடியாக செலவு உயர்ந்துள்ளது. மக்கள்பணத்தை ஆளுநர் மாளிகை வீணடிக்கிறது. கரோனா காலத்தில் தான் 30 சதவீத செலவை குறைத்துள்ளதாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ரூ.7 கோடியில் 30 சதவீதமாக ரூ.2 கோடியே 10 லட்சம் ஆகிறது. இதனை மீனவர்கள் நலத்திட்டத்திற்கு வழங்கலாம்,
அதேபோல், மீனவர்களுக்கு நலவாரியம் அமைக்க அனுமதி கேட்டு கோப்பு அனுப்பினோம். புதுவை, காரைக்காலில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க கோரினோம். புதுவை, காரைக்காலில் மீன் அதிகளவில் கிடைக்கிறது. இதனை பதனிட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பலாம். ஆனால் இதற்கு அனுமதி வழங்காமல் புதுவையில் பால் தட்டுப்பாடு உள்ள நிலையில், பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கவும், தேன் தயாரிப்பு ஆலைக்கும் அனுமதி வழங்குகிறேன் என்கிறார்.
ஆளுநர் காட்டும் சலுகை
ஆளுநர் மாளிகையில் இடைத்தரகர்கள் ஆதிக்கமும், முறைகேடும் மலிந்து உள்ளது என ஏற்கெனவே புகார் கூறியுள் ளேன். இதற்கு சரியான பதிலும் தெரிவிக்கவில்லை. நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. புகார் பொய்யாக இருந்தால் என்மீது நடவடிக்கை எடுக்கலாம்.
புதுச்சேரியில் துப்புரவு பணி மேற்கொள்ளும் நிறுவனத்தோடு ஆளுநர் கிரண்பேடிக்கு தொடர்பு உள்ளது. இந்த நிறுவனத்திற்கு மட்டும் நிதியை ஆளுநர் கிரண்பேடி நிறுத்துவது கிடையாது. தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக முதல்வர், அமைச்சரை மீறி செயல்படுவது ஏன் என தெரிவிக்க வேண்டும். அவரது செயல்பாடுகள் தொடர்பாக கேள்வி எழுப்பி 6 பக்க கடிதத்தை ஆளுநருக்கு புதன்கிழமை (நேற்று) அனுப்பியுள்ளேன் என்று தெரிவித்தார்.