அண்ணா பிறந்த நாளன்று நெடுநாள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக செய்த குற்றத்தால் சிறையில் அடைக்கப்படும் கைதிகள், சிறைச்சாலையில் திருந்திய மனிதர்களாக மாறி முறையான வாழ்க்கை வாழத் துடிக்கிறார்கள். ஆயுள் தண்டனை பெற்றோர், 10 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்றதைக் காரணம் காட்டி சிறையிலிருந்து விடுவிக்கப் படாமலேயே உள்ளனர். பல சிறைவாசிகள் 15 முதல் 20 ஆண்டுகள் கடந்தும் சிறையில் இருக்கின்றனர். அதனால், மரணத்தைவிடக் கொடுமையான மனத் துன்பங்களுக்கு அவர்கள் ஆளாகி உள்ளனர்.
திருந்திய மனிதர்களாக, சிறைச்சாலையின் உள்ளே ஏராளமான மனிதர்கள் பொது மன்னிப்பு பெற முடியாமலும், பரோலில் செல்ல முடியாமலும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த குறைபாடுகளைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அண்ணாவின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு, பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போரை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.