வேலூர் மண்டல மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமைப் பொறியாளர் வீட்டில் கடந்த 24 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையில் 3.60 கோடி ரொக்கம், மூன்றரை கிலோ நகைகள், ஆறரை கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வேலூர் காட்பாடி காந்திநகரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் வேலூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, ஓசூரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதன் இணை தலைமைப் பொறியாளராக பன்னீர்செல்வம் (57) என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இவரது தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் சிவப்பு பட்டியலில் இடம் பெற்ற தொழிற்சாலைகள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகள் மீது லஞ்சப் பணம் பெற்ற பிறகே பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு வந்துள்ளார். இந்தப் புகாரின்பேரில் மண்டல மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை (13-ம் தேதி) நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தை வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் ஆய்வாளர்கள் விஜய், ரஜினி உள்ளிட்ட குழுவினர் ரகசியமாக கண்காணித்தனர்.
கூட்டம் நிறைவுப் பெற்ற பிறகு அங்கிருந்து காரில் சென்ற பன்னீர்செல்வத்தை காவல் துறையினர் பின்தொடர்ந்து சென்றனர். காட்பாடி காந்திநகர் முனிசிபல் காலனியில் உள்ள வாடகை வீட்டுக்கு அவர் சென்றார். அந்த வீட்டில் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
இதில், பன்னீர்செல்வத்தின் காரில் இருந்து ரூ.2.25 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். வீட்டில் நள்ளிரவு 12 மணி வரை நீடித்த சோதனையில் மொத்தம் ரூ.33.73 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உதவியுடன் பணத்தை பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.
மூட்டைகளில் பணம் பறிமுதல்
இந்த சோதனையின் மறுபகுதியாக ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனையிட்டனர். வீட்டின் பழைய பொருட்கள் வைக்கும் அறையில் இருந்து மூட்டை மூட்டையாக மறைத்து வைத்திருந்த பணத்தையும் கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளி பொருட்களையும், சொத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வேலூரில் உள்ள வீட்டில் சோதனை குறித்த தகவல் கிடைத்ததும் பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் வீட்டில் இருந்த பணம், நகைகளை மூட்டைகளில் கட்டி பழைய பொருட்கள் வைக்கும் அறையில் மறைத்துள்ளனர். ஆனால், போலீஸார் மறைத்து வைத்த மூட்டைகளை மொத்தமாக பறிமுதல் செய்ததைப் பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
நேற்று மாலை 7.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் ரூ.3.60 கோடி அளவுக்கு ரொக்கம், மூன்றரை கிலோ தங்கம், ஆறரை கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.100 கோடி மதிப்பிலான 90 சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் இதுவரை நடத்திய சோதனைகளில் அதிகபட்சமாக ரூ.76.64 லட்சம் பணத்தை கடந்த பிப்ரவரியில் வேலூர் மாவட்ட தனித்துணை ஆட்சியர் (முத்திரை கட்டணம்) தினகரன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்தனர். தற்போது அதிகபட்ச அளவாக பணம், தங்கம், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.