வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் தொடங்கும் அடையாறு ஜீரோ பாயின்ட் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சுப்ரமணியம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

அடையாறு ஆற்றில் வெள்ள தடுப்பு பணிகள் தீவிரம்: காஞ்சிபுரம் மாவட்ட வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம் அடையாறு ஆற்றில் நடைபெற்ற வெள்ள தடுப்பு பணி குறித்து கண்காணிப்பு அலுவலர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித் துறை,நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து, வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் அடையாறு ஆற்றில் மழைநீர் தங்கு தடையின்றி செல்லவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அனைத்து அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டமும் சமீபத்தில் நடைபெற்றது. மேலும் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் சிலநாட்களுக்கு முன்பாக, அடையாறு ஆற்றில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் தமிழக கூட்டுறவுச் சங்கப் பதிவாளரும், காஞ்சி மாவட்ட வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அலுவலருமான இரா.சுப்ரமணியம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அடையாறு ஆறு தொடங்கும் ஆதனூர் பகுதியில் ஜீரோ பாயின்ட் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள கதவணை, ஆதனூர் ஏரியில் இருந்து உபரி நீர் அடையாறில் செல்லும் வகையில் மூடுகால்வாய், வண்டலூர் - ஒரகடம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம், அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் - சோமங்கலம் ஆகிய பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகளை அவர் பார்வையிட்டார். மேலும் அடையாறு ஆறு அகலப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, திட்ட இயக்குநர் தர், பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்ய, நீர்வள மேலாண்மை திட்டச் செயற்பொறியாளர் ரமேஷ், உதவிப் பொறியாளர் குஜராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT