சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அனைத்து வணிகர்கள் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோயம்பேட்டில் கடந்த செப். 18-ம் தேதி உணவு தானிய மொத்த விற்பனை வளாகம் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காய்கறி சந்தையில் மொத்த விற்பனை கடைகள் மட்டும் 28-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. அடுத்த 10 நாட்களில் பழச்சந்தை, மலர் சந்தை, சிறு மொத்த காய்கறி விற்பனை கடைகள் ஆகியவை திறக்கப்படும் என்று அரசு உறுதி அளித்திருந்தது.
இதற்கிடையே கரோனா தொற்றைக் காரணம் காட்டி, இதர கடைகள் திறப்பை அதிகாரிகள் தாமதித்து வருகின்றனர்.
கோயம்பேடு சந்தையில் அனைத்து கடைகளையும் திறக்க வலியுறுத்தி, தொடர்புடைய அதிகாரிகளை நாளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம்.
கோயம்பேடு சந்தையில் அனைத்து கடைகளையும் திறக்க, அரசு மேலும் தாமதித்தால், சென்னை மண்டல அளவில் வியாபாரிகளைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும். இதைத் தொடர்ந்தும் அரசு மவுனம் சாதித்தால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.