தமிழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஊக்குவிக்கப்படாதது துரதிஷ்டவசமானது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன், உடலில் உள்ள கிருமியை கொல்லும் சக்தி கொண்ட 66 மூலிகை கொண்ட இம்ப்ரோ எனும் பொடியை தயாரித்துள்ளேன். இந்த மருந்து பொடியை சோதனைக்கு உட்படுத்தி அங்கீகாரம் வழங்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தயாரித்துள்ள மருந்து பொடியை தமிழக அரசு பரிசோதிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழக மருத்துவக்குழு பரிசோதித்து மருந்து பொடியில் கிருமியை கொல்லும் சக்தி இருப்பதாக அறிக்கை அளித்தது. இதையடுத்து மருந்து பொடியை ஆய்வு செய்ய மத்திய ஆயுஷ் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில், வைராலஜி பரிசோதனை தொடர்பாக மனுதாரருடன் செப். 15-ல் மத்திய மருத்துவக்குழு ஆய்வு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒரு ஆராய்ச்சியாளரை ஊக்குவிக்கும் முறை இது தானா? தமிழகத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. ஆராய்ச்சியாளர்கள் ஊக்கப்படுத்தப்படாதது துரதிர்ஷ்டவசமானது. இந்தியர்கள் யாராவது மருத்துவத் துறையில் நோபல் பரிசு பெறுகிறார்களா? இதில் அரசியல் நகர்வுகளும் உள்ளன என்றனர்.
மனுதாரர் தரப்பில், மனுதாரர் மருந்தை ஆய்வு செய்ததில் 96.8 சதவிகிதம் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஆய்வு அறிக்கையை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவும், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.