விலையில்லா வேட்டி சேலை திட்டத்துக்காக நெசவாளர்களுக்கு தரமில்லா நூல் வழங்கப்படுவதாகவும் அதை கண்காணிக்க நிபுணர் குழுவை அமைக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் முத்தூர் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் கோவிந்தராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில், தமிழக அரசின் விலையில்லா வேட்டி சேலைத் திட்டத்திற்கு, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, அரசால் ஒப்பந்ததாரர்கள் மூலம் தரமற்ற நூல் வழங்குவதாகவும், அதை தடுக்கின்ற வகையில், நூல் தரத்தை சோதனை செய்ய நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைக்க உத்தரவிட கோரியிருந்தார்,
அவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழக அரசின் விலையில்லா வேட்டி சேலைத் திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 250 கோடி ரூபாய் அளவிற்கு நூல் வாங்கப்படுகிறது. அவற்றின் தரத்தை சோதிக்காமல் நெசவாளர்களுக்கு தரமற்ற நூல் வழங்கப்படுவதால் தரமற்ற வேட்டி மற்றும் சேலையை தான் உற்பத்தி செய்யக்கூடிய நிலைமை ஏற்படுகிறது.
இதனால் நெசவாளர்களுக்கும் பயனாளிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது”. என தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நூல் கொள்முதல் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட வேட்டி சேலைகளை தர சோதனை செய்யும்போது, நெசவாளர்களுக்கு வழங்கப்படும் நூலின் தரத்தை ஏன் சோதிப்பதில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த மனுவுக்கு இரண்டு வாரத்தில் பதிலளிக்கும்படி, தமிழக கைத்தறி துறை செயலாளர் மற்றும் கைத்தறித்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டார்