தமிழகம்

குமரியில் இரு நாட்களாக கொட்டிய கனமழை; முள்ளங்கினாவிளை, சுருளோட்டில் தலா 8 செ.மீ., பதிவு: பேச்சிப்பாறை நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்தது

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. முள்ளங்கினாவிளை, சுருளோடு ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ., மழை பதிவானது. பேச்சிப்பாறை நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்துள்ளது.

வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால் குமரி மாவட்டத்தில் இரு தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. சூறை காற்றுடன் விடிய, விடிய பெய்த மழையால் நகர, கிராம பகுதிகளில் மரக்கிளைகள் மின்கம்பிகளில் விழுந்து மின்தடை ஏற்பட்டன.

மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவுகிறது. கும்பப்பூ நெல் சாகுபடி பணி மழைக்கு மத்தியில் பரவலாக நடந்து வரும் அதே வேளையில் ரப்பர் பால்வெட்டும் தொழில், கட்டிட தொழில், தென்னை சார்ந்த தொழில்கள், செங்கல் சூளை, உப்பள தொழில் என அனைத்து தரப்பட்ட தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆறு, கால்வாய்களில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகின்றன. அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 84 மிமீ., சுருளோட்டில் 82 மிமீ., மழை பெய்திருந்தது. இது 8 செமீ., பதிவாகும். மேலும் மாம்பழத்துறையாறில் 77 மிமீ., பூதப்பாண்டியில் 42, சிற்றாறு ஒன்றில் 52, கன்னிமாரில் 59, குழித்துறையில் 48, மைலாடியில் 63, நாகர்கோவிலில் 66, பேச்சிப்பாறையில் 60, பெருஞ்சாணியில் 56, புத்தன்அணையில் 55, சிவலோகம் என்னும் சிற்றாறு இரண்டில் 46, தக்கலையில் 42, குளச்சலில் 32, இரணியலில் 49, பாலமோரில் 74, ஆரல்வாய்மொழியில் 31, கோழிப்போர்விளையில் 75, அடையாமடையில் 31, குருந்தன்கோட்டில் 48, ஆனைகிடங்கில் 64, முக்கடல் அணையில் 35 மிமீ., மழை பெய்திருந்தது.

பாலமோரில் கனமழை பெய்ததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறைக்கு விநாடிக்கு 2826

கனஅடியும், பெருஞ்சாணிக்கு 2708 கனஅடி தண்ணீரும் உள்வரத்தாக வருகிறது. இதனால் 48 அடி கொள்ளவு கொண்ட பேச்சிப்பாறை நீர்மட்டம் 41 அடியாகவும், 77 அடி கொள்ளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72 அடியாகவும் உயர்ந்துள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணை நீர்மட்டம் இன்று 21.6 அடியாக உயர்ந்தது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குழித்துறை தாமிரபணி ஆறு, பழையாறு, சோழன்திட்டை அணை, வள்ளியாறு, சபரிஅணைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

SCROLL FOR NEXT