திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 5 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 12 அடி உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும், பிறஇடங்களிலும் நேற்று மழை நீடித்தது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணைப்பகுதியில் 64 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட இந்த அணைக்கு நீர்வரத்து 4893.75 கனஅடியாக அதிகரித்திருந்தது. இதனால் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
நேற்று இந்த அணை நீர்மட்டம் 89.15 அடியாக இருந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஒரே நாளில் 5.15 அடி உயர்ந்து இன்று காலையில் நீர்மட்டம் 94.30 அடியாக இருந்தது.
அணையிலிருந்து 504 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
இதுபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11.91 அடி உயர்ந்து இன்று 113.48 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 66.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1230 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
மாவட்டத்தில் அணைப்பகுதிகள் மற்றும் பிறஇடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 64, கொடுமுடியாறு- 60, சேர்வலாறு- 42, மணிமுத்தாறு- 17, அம்பாசமுத்திரம்- 3, சேரன்மகாதேவி- 2.40, நாங்குநேரி- 4, பாளையங்கோட்டை- 1, ராதாபுரம்- 10, திருநெல்வேலி- 1, களக்காடு- 6.2, மூலக்கரைப்பட்டி- 5.