தமிழகம்

இலங்கை போர்க்குற்ற விசாரணை: பேரவைத் தீர்மானத்தின்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

செய்திப்பிரிவு

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "இலங்கையில் கடைசி கட்ட போரின் போது இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை பற்றி தாங்கள் அறிவீர்கள். இது குறித்த ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள போர்க்குற்ற விசாரணை அறிக்கை ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்த தீர்மானம் பற்றி 1.10.2015 மற்றும் 2.10.2015 ஆகிய தேதிகளில் விவாதிக்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் இது பற்றி நிலவும் பொதுக்கருத்தை முன்னிட்டு தமிழக சட்டப்பேரவையில் விவாதம் மேற்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் போர்க்குற்றங்கள் மற்றும் போரின் இறுதிக் கட்டத்தில் செய்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த இந்திய அரசு வலியுறுத்துமாறு தமிழக அரசு கேட்டுக் கொள்கிறது.

தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் உடனடியாக மேலும் நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசை நான் கேட்டுக் கொள்கிறேன்." என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்:

'இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற போது சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தினை இந்தியாவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளுடன் இணைந்துக் கொண்டு வர வேண்டும்.

அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால், அதனை மாற்ற இந்தியா ராஜதந்திரி ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவற்றை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்வைத்தார். இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT