தமிழகம்

கலாமை வழிநடத்தியதும் புத்தகங்களே: அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ் தகவல்

கே.கே.மகேஷ்

கலாமை வழிநடத்தியதும் புத்தகங்களே என்று அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ் பேசினார்.

மதுரை புத்தக திருவிழாவில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வில் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ் பேசியதாவது:

வாழ்க்கையில் நாம் இன்னும் பயணப்பட வேண்டிய இடம் எது என்று தெளிவாகக் காட்டுவது புத்தகங்கள் தான். 1980-ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த நான், ரோகிணி ராக்கெட்டை ஏவிய கலாமை வாழ்க்கையில் ஒருமுறையாவது சந்தித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தேன்.

என்னை மட்டுமல்ல, கலாமை வழிநடத் தியதும் புத்தகங்கள் தான். 1953-ல் அவர் சென்னை மூர் மார்க்கெட்டில் வாங்கிய லைப் ப்ரம் மெனி லேம்ப்ஸ் என்ற புத்தகம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை வழிநடத்தியதாக கலாம் சொல்வார். அந்தப் புத்தகம் மிகவும் சேதமுற்று, பலமுறை பைண்டிங் செய்யப்பட்டாலும்கூட இறக்கும் வரை அவரது டேபிளில் இருந்தது.

தனது 40 வருட அனுபவத்தை அக்னி சிறகுகள் என்ற புத்தகமாக அவர் எழுதக் காரணம், அது இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கை தான். அந்தப் புத்தகம் 4 கோடி பிரதிகள் விற்னையாகியுள்ளது என்றார். பேராசிரியர் க.ராமசாமி, பத்திரிகையாளர்கள் மை.பா.நாராயணன், இரா.விஜயன், பபாசி ஆடம் சாக்ரடீஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT