ரேஷன் கடைகள் புதுச்சேரியில் மூடப்பட்டதற்கு எந்த புகாரும் இல்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வழிகாட்டுதல்களை அடிப்படையாக கொண்டு அரிசிக்கு பதிலாக பணம் தரப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அரசு கொள்கை முடிவுக்கு மீறி ரேஷன் அரிசிக்கு பதிலாக பணம் தருமாறு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்துகிறார், மத்திய அரசும் அதை செய்ய சொல்கிறது என்று முதல்வர் நாராயணசாமி நேற்று குற்றம்சாட்டியிருந்தார். புதுச்சேரியில் ரேஷன் கடைகளை மூடி அரிசி போடுவதை தடுத்து விட்டு, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இது தொடர்பாக சமூக வலைதளத்தில் இன்று (அக். 14) வெளியிட்ட தகவல்:
"பயனாளிகளுக்கு நேரடியாக அவரவர் வங்கிக் கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யும் முறையை மக்கள் நன்கு அறிந்து ஏற்றுள்ளனர். அரசு நிதி சலுகைகள் தகுதியானவர்களுக்கு நேரடியாக செல்கிறது. இவ்விஷயத்தில் 9 லட்சம் பயனாளிகளிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை. வேறு யாருக்கு சிக்கல் உள்ளது? திட்டத்தால் பயன்பெறும் மக்களுக்கு எந்த சிக்கலும் இல்லை.
ரேஷன் கடைகள் மூடப்பட்டதற்கு எந்த புகாரும் இல்லை. இதனால், ரசீதுகள் தேவையில்லை. ஒப்பந்தங்கள் இல்லை. டெண்டர்கள் இல்லை. நிலுவை இல்லை. விநியோகம் தொடர்பாகவும், தரம் தொடர்பாகவும், எடை குறைவு தொடர்பாகவும் புகார்கள் இல்லை. அண்டை மாநிலங்களில் இருந்து அரிசி, இதர பண்டங்களை ரேஷனுக்குக் கொண்டுவர லாரிகள் ஏதும் வரவில்லை. பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்துவதால் உள்ளூர் சந்தைகளில் இருந்து பொருள்கள் வாங்கப்படும். உள்ளூர் வர்த்தகர்களுக்கும் பயன்தரும்.
இவ்விஷயத்தில் மக்கள் பிரதிநிதிகளை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? யூனியன் பிரதேசங்களில் உள்துறை அமைச்சங்களின் முடிவே இறுதியாகும். துணைநிலை ஆளுநரே நிர்வாகி. அவரே இந்திய அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்துகிறார். மக்களின் நலனை மிகவும் நேர்மையுடனும், வெளிப்படையிலான முறையிலும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதே கடமையாகும்.
மத்திய அரசின் கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களை அடிப்படையாக கொண்டு அரிசிக்கு பதிலாக பணம் தரப்படுகிறது"
இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.