வரும் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை ஜீரோவாகத்தான் இருக்கும் என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
சென்னை, அடையாறில் இன்று (அக். 14) எல்.முருகன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்துள்ளதே?
திமுகவின் முந்தையை தேர்தல் அறிக்கைகள் ஜீரோவாகத்தான் இருந்தன. இப்போதும் ஜீரோவாகத்தான் இருக்கும்.
வேளாண் சட்டங்கள் குறித்து அதில் இடம்பெறும் என தெரிகிறதே?
விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். வேளாண் திருத்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர். விவசாய சங்க பிரதிநிதிகள் எல்லோரும் தெளிவாக இருக்கின்றனர். விவசாயிகளின் ஆதரவு அவர்களுக்கு இல்லை.
பாஜகவில் மேலும் முக்கிய நபர்கள் இணைவார்களா?
நிறைய பேர் இணைய இருக்கின்றனர்.
பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்களே?
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த சமூகத்தில் ஒற்றுமை நிலவ அரசு, சமூகங்கள் மத்தியில் குழுக்கள் அமைத்து ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையை உருவாக்க கவுன்சிலிங் அளிக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையை நான் எஸ்.சி/எஸ்.டி ஆணையத்தில் இருக்கும்போதே கூறியிருக்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவர்களின் பணிகளை செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இம்மாதிரியான சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அரசாங்கம் ஒடுக்க வேண்டும்.
இதில் ஈடுபட்டவர் திமுகவின் துணைத்தலைவர். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், திமுக தலைவர் அறிக்கை வெளியிடுகிறார். அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினரே பட்டியலின மக்களை தாழ்வாக பேசுகிறார். பேருக்காக அறிக்கை விடாமல், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்? இன்று வரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவ்வாறு பேசினர். அவர்களின் உள்ளாட்சி பிரதிநிதிகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மக்களை திசைதிருப்புவதற்காகத்தான் ஸ்டாலின் அறிக்கைகள் வெளியிடுகிறார்.
அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பாஜக ஏற்றுக்கொண்டு விட்டதா?
நான் அன்றைக்கே அவரை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டேன். அதற்கு என்ன அர்த்தம்?
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.