தொடர் மழை மற்றும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து தென் பெண்ணை ஆற்றில் திறக்கப்படும் நீரால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 45 ஏரிகள் நிரம்பின.
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிக அளவில் உள்ளது. கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று 938 கனஅடியாக இருந்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 46.60 அடியாக நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருவதால், ஒரு வாரத்தில் கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி அணையில் கடந்த 3 ஆண்டுகளாக மிகவும் குறைந்த அளவே தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. இதனால், அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் வறண்டிருந்தன. இந்தப்பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வந்தனர்.
இந்நிலையில், அணையில் மதகுகள் மாற்றப்பட்டு, அணையின் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்கும் பணி தொடங்கியுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், அவற்றின் தண்ணீர் தேவைக்கான கிணறுகள் ஆகியவை நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளன. விளைநிலப்பகுதி நீரில் மூழ்கிய நிலையில், இங்குள்ள கிணறுகளில் இருந்து நீர் இறைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள டீசல் இன்ஜின்களை உயரமான இடத்துக்கு மாற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பொதுப் பணித்துறை அலுவலர்கள் கூறும் போது, ‘‘வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால், கிருஷ்ணகிரி அணையில் 50 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். 50 அடிக்கு மேல் வரும் உபரி நீர், பாசனக் கால்வாய்கள் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப் படும். டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் 52 அடிவரை அணையில் தண்ணீர் தேக்கப்படும்.
தற்போது பெய்து வரும் தொடர் மழையால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 45 ஏரிகள் நிரம்பி உள்ளன. கிருஷ்ணகிரி அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள அவதானப்பட்டி, திம்மாபுரம், பாளேகுளி, தேவசமுத்திரம் ஏரி உட்பட 27 ஏரிகளும் இதில் அடங்கும். இதேபோன்று, பாரூர் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் 20 ஏரிகளுக்கு கால்வாய் மூலம் செல்கிறது. இவற்றில் 18 ஏரிகள் நிரம்பி உள்ளன. பாளேகுளி ஏரியில் இருந்து கால்வாய் வழியாக காரிமங்கலம் பகுதிக்கு இன்னும் ஓரிரு நாளில் தண்ணீர் திறந்துவிடப்படும்,’’ என்றனர்.