தனியார் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆன்-லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுவதால், பழைய செல்போன் விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேரம் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, அரசு விலையில்லா செல்போன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கல்வி நிலையங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாநில அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தனியார் மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வி நிலையங்களில் ஆன்-லைன் மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் கல்வி கற்பிக்கப்படுகிறது.
பெரும்பாலான வீடுகளில் வீட்டில் ஒரே ஒரு செல்போன் இருக்கும் நிலையில், பணிக்குச் செல்லும் பெற்றோர் செல்போனை எடுத்துச் செல்வதால், குழந்தைகள் கல்வி கற்க கூடுதலாக செல்போன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னணி நிறுவனங்களின் செல்போன்கள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பழைய செல்போன்களை பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து வருகின்றனர்.
இதனால், பழைய செல்போன் விற்பனை அதிகரித்து விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா செல்போன் வழங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பெற்றோர்கள் சிலர் கூறியதாவது:
தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆன்-லைன், வாட்ஸ்அப் மூலம் பாடம் கற்பிக்கப்படுகிறது. மேலும், தேர்வுகளை ஆன்-லைன் மூலம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதனால், குழந்தைகள் கல்வி கற்க செல்போன் அத்தியாவசியமாகியுள்ளது. தற்போது, பழைய செல்போன் விலையும் அதிகரித்துள்ளது.
ஊரடங்கால் தற்போது புதிய செல்போன் வாங்கும் அளவுக்கு பொருளாதாரம் இல்லை. எனவே, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா செல்போன் அரசு வழங்க வேண்டும், என்றனர்.