குடியாத்தம் அரசு மருத்துவமனையில் காசநோயை ஒன்றரை மணி நேரத்தில் கண்டறியும் ‘ட்ரூநாட்’ என்ற நவீன கருவியை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் ‘காசநோய் இல்லா உலகம்-2025’ இலக்கை அடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒன்றரை மணி நேரத்தில் காசநோயை கண்டறியும் ‘ட்ரூநாட்’ என்ற நவீன கருவி அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு ஏற்கெனவே இந்த கருவி வழங்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்துக்கும் இந்த நவீன கருவி வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும்பென்ட்லென்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காச நோய் தடுப்பு மையத்திலும் காச நோய் கண்டறியும் நவீன கருவிகள் உள்ளன. எனவே, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் இந்த கருவியை பயன்படுத்த உள்ளனர்.
இந்த கருவியின் மூலம் காச நோயை கண்டறிவதுடன் கரோனா வைரஸ் தொற்றையும் கண்டறிய முடியும். ‘ட்ரூநாட்’ பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதியானால் அடுத்ததாக ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மூலம் சுலபமாக உறுதிப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தொழிலாளர்கள் அதிகம் உள்ள குடியாத்தம் பகுதியில் காசநோய் பரிசோதனையை அதிகளவில் மேற்கொள்ளவும் அதற்கான மாத்திரைகளையும் விரைவாக வழங்க முடியும். மேலும், காச நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ‘ரிபாம்சின்’ மாத்திரை நோயாளிக்கு எந்த வகையில் பயனளிக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
இந்நிலையில், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் ‘ட்ரூநாட்’ கருவியின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று தொடங்கி வைத்தார். கையடக்க கருவியான ‘ட்ரூநாட்’டை எந்த இடத்துக்கும் சுலபமாக எடுத்துச் செல்ல முடியும். பரிசோதனை செய்யும் இடத்தில் குளிர்சாதன வசதி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண ஃபேன் இருந்தாலே போதும். இதன் முடிவுகள் தெளிவாக தெரியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவம்) டாக்டர் யாஸ்மின், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், துணை இயக்குநர்கள் (காசநோய்) டாக்டர் பிரகாஷ் அய்யப்பன், ஜெயஸ்ரீ மற்றும் குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திகேயன், டாக்டர்கள் மாறன் பாபு, ரம்யா, வட்டாட்சியர் வத்சலா, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில் தாமஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.