வேதகிரீஸ்வரர் கோயில் சங்குதீர்த்த குளத்தின் நீர்வரத்து கால்வாய்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால், கனமழை பெய்துவரும் நிலையிலும் குளத்துக்கு நீர்வரத்து இல்லை எனநீர்நிலை ஆர்வலர்களும், பக்தர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அடிவாரத்தில், 12 ஏக்கர் பரப்பளவில் சங்குதீர்த்த குளம் அமைந்துள்ளது.
மழைக்காலத்தின்போது, மலையில் இருந்து மூலிகை வளத்துடன் அடிவாரத்துக்கு வரும் மழைநீரை வடிகட்டி, சுத்தமான நீராக சங்குதீர்த்த குளத்துக்கு செல்லும் வகையில் 4 கால்வாய்கள் அமைந்துள்ளன. இந்நிலையில், மேற்கண்ட நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், கனமழை பெய்துவரும் நிலையிலும் நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சங்கு பிறக்கும் ஐதீகம்பாதிக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் நகர மக்கள் கூறியதாவது: நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால், குளம் வறட்சியடைவதோடு நகரின் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
மேலும், மலையில் இருந்து வரும் மூலிகை நீர் வீணாக கழிவுநீர் கால்வாயில் கலந்து வருகிறது. பேரூராட்சி, அறநிலையத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி சங்குதீர்த்த குளத்துக்கு நீர்வரத்தை ஏற்படுத்தி பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, வருவாய்த் துறைஅதிகாரிகள் கூறியதாவது: சங்குதீர்த்த குளத்தின் நீர்வரத்து கால்வாய்களில் ஆய்வுசெய்து, ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.