ஊதியம் கேட்டு பத்துக்கும் மேற்பட்ட துறையினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்றும், அதிகாரத்தில் இருப்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பது அவமானம் என்றும், புதுச்சேரி திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ, கூட்டணிக் கட்சியான ஆளும் காங்கிரஸ் அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நிலுவையில் உள்ள 10 மாதத்திற்கும் மேலான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தரக்கோரி கடந்த 1-ம் தேதி முதல் கல்வித்துறை அலுவலக வளாகத்தில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை எந்தவிதமான பதிலும் ஆட்சியாளர்களால் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், ஆளும் காங்கிரஸ் அரசின் கூட்டணிக் கட்சியான திமுகவின் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ, போராட்டம் நடக்கும் இடத்துக்கு இன்று (அக்.13) சென்றார். அங்கு ஆசிரியர்கள் மத்தியில் எம்எல்ஏ சிவா பேசியதாவது:
"புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர், முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளால் ஆசிரியர்கள் அல்லல்பட்டு வருகின்றனர். பள்ளி நிர்வாகம் கணக்கு தரவில்லை என்பதற்காக ஆசிரியர்கள், ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்காமல் இருப்பதும் சரியல்ல.
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 450 ஆசிரியர்களுக்குக் கடந்த 10 மாதங்களாக ஓய்வூதியம் கிடைக்கவில்லை. ஓய்வூதியத்தில்தான் அவர்கள் மருத்துவச் செலவுகளை மேற்கொண்டு வந்திருப்பர். இதை அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரு நொடியாவது சிந்திக்க மாட்டார்களா?
புதுச்சேரியில் இன்று பாசிக், பாப்ஸ்கோ, பொதுப்பணித்துறை, சுதேசி பாரதி மில், ஆசிரியர்கள் என 10-க்கும் மேற்பட்ட தரப்பினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சம்பளம் கேட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பதை அவமானமாக நினைக்கின்றோம். புதுச்சேரி மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படியே இருந்தால் மக்கள் கொந்தளிப்பார்கள், மக்களின் புரட்சியை அடக்க முடியாது. எப்படி வேண்டுமானாலும் ஆட்சியில் இருக்கலாம் என்ற சிந்தனை ஆட்சியாளர்களுக்கு இருக்கக் கூடாது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு சுய கவுரவம் வேண்டும்".
இவ்வாறு சிவா எம்எல்ஏ பேசினார்.