ரேஷனில் அரிசி போடுவதை தடுத்து விட்டு, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை எவ்வாறு புதுச்சேரியில் நிறைவேற்ற முடியும்? எனக்கூறியுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸ் என்பது பாஜகவின் தலைமை அலுவலகமாக மாறிவிட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று (அக். 13) செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர் குடும்பத்திற்கும் எனது இரங்கலை தெரிவிக்கின்றேன்.
பண்டிகை காலங்களில் ஏழைகளுக்குத் துணி தருவதற்கு பதிலாகவும், ரேஷனில் அரிசி தருவதற்கு பதிலாக பயனாளிகளுக்குப் பணம் தர துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தினார். மத்திய உள்துறையும் இதை செய்யச்சொல்கிறது.
ரேஷனில் அரிசி போடுவதை தடுத்து விட்டு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை எவ்வாறு நிறைவேற்ற முடியும்.ரேஷனி்ல் அரிசி தருவதும், ஏழைகளுக்குப் பண்டிகை காலங்களில் இலவச துணி தருவதும் அரசின் கொள்கை முடிவு. அதை மாற்ற அதிகாரம் இல்லை. அரிசியை ரேஷனில் வழங்குவது தொடர்பான வழக்கு மேல்முறையீட்டில் உள்ளது.
ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸ் என்பது பாஜகவின் தலைமை அலுவலகமாக மாறிவிட்டது. அதேபோல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நசுக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
ரேஷனில் அரிசியும் தரவில்லை, வங்கியில் பணமும் பயனாளிகளுக்குப் போடவில்லையே என்று கேட்டதற்கு, "வழக்கு முடிந்தவுடன் வழங்குவோம். நிதி அனைத்தும் ஒதுக்கீடு செய்து விட்டோம்" என்று தெரிவித்தார்.
கரோனா தொற்றால் மாணவர் பாதிக்கப்பட்டுள்ளாரே என்று கேட்டதற்கு, "ஒரு மாணவனுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகுப்பறையை மூடியுள்ளோம். இதர வகுப்புகள் தொடரும்" எனக் கூறினார்.