புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம். 
தமிழகம்

புதுக்கோட்டையில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு கட்டுவோருக்கு அரசு மானியம் வழங்காததால் பணியில் தேக்கம்: ஆட்சியரிடம் புகார்

கே.சுரேஷ்

புதுக்கோட்டையில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு கட்டுவோருக்கு மானியம் வழங்காததால் கட்டுமானப் பணியில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சுமார் 1,300 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதில், தலா ஒரு வீட்டுக்கு அடித்தளம் போட்ட பிறகு ரூ.50 ஆயிரம், லிண்டலுக்குப் பிறகு ரூ.50 ஆயிரம், கான்கிரீட்டுக்குப் பிறகு ரூ.50 ஆயிரம் மற்றும் அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு ரூ.60 ஆயிரம் என 4 கட்டங்களாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை மத்திய, மாநில அரசுகள் மானியமாக வழங்குகின்றன.

அதில், பல்வேறு நிலைகளில் கட்டி முடிக்கப்பட்ட பிறகும்கூட உரிய மானியத்தொகை வழங்காததால் பணியில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து திமுக நகரச் செயலாளர் கே.நைனா முகமது கூறுகையில், "அடித்தளப் பணி முடித்த 120 பேர், கான்கிரீட் பணி முடித்த 300 பேர், அனைத்துப் பணிகளும் முடித்த 80 பேருக்கும் அரசு உரிய மானியத்தொகையை வழங்கவில்லை.

நைனா முகமது

இதனால், வீடு கட்டும் பணியை மேற்கொள்ள முடியாமலும், கட்டி முடித்தோர் கடன் கட்ட முடியாமலும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். எனவே, குடிசை மாற்று வாரியத்தினர் மானியத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். இது தொடர்பாக ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதுகுறித்து குடிசை மாற்று வாரியப் பொறியாளர்கள் கூறியபோது, "ஓரிரு நாட்களில் அனைவருக்கும் மானியத் தொகை வழங்கப்படும். சிலருக்கு, வங்கிக் கணக்கு தவறாக உள்ளது. அதைச் சரிசெய்த பிறகு அவர்களது கணக்கில் செலுத்தப்படும்" என்றனர்.

SCROLL FOR NEXT