அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம் 
தமிழகம்

புதுச்சேரியில் 32 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா தொற்று; புதிதாக 268 பேர் பாதிப்பு: மேலும் 2 பேர் உயிரிழப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 268 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக். 13) கூறியதாவது:

"புதுச்சேரியில் 4,249 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 202, காரைக்காலில் 36, ஏனாமில் 8, மாஹேவில் 22 என மொத்தம் 268 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், காரைக்காலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 567 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.77 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 32 ஆயிரத்து 4 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,306 பேர், காரைக்காலில் 403 பேர், ஏனாமில் 44 பேர், மாஹேவில் 191 பேர் என 2,944 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,397 பேர், காரைக்காலில் 92 பேர், ஏனாமில் 63 பேர், மாஹேவில் 76 பேர் என 1,628 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைச் சேர்த்து மொத்தம் 4,572 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 235 பேர், காரைக்காலில் 21 பேர், ஏனாமில் 5 பேர், மாஹேவில் 49 பேர் என 310 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 865 (83.94 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 787 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 2 லட்சத்து 62 ஆயிரத்து 94 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

சுகாதாரத்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 3 இயக்குநர்கள் உள்ளனர். அனுபவம் வாய்ந்த அவர்களை அழைத்து இப்போது உள்ள சூழலைக் குறிப்பிட்டும், இனி மக்களுக்கு என்ன தேவை இருக்கிறது என்பது குறித்தும் பேச உள்ளேன். இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறைச் செயலாளர், இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதுவரை 32 ஆயிரத்து 4 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு குழுவை அமைத்து அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்கள் எந்த நிலையில் உள்ளனர், வேறு பிரச்சினை ஏதேனும் இருக்கிறதா? என்பதைப் பார்த்துவிட்டு மீண்டும் அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய கூட்டத்தில் பேசி முடிவு செய்யப்படும்".

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT