தமிழகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அமலுக்குவந்த பின்னரே நீட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் முறையீடு

கி.மகாராஜன்

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பரிந்துரையை அமல்படுத்திய பிறகு நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் சார்பில் வழக்கறிஞர் பிரசன்னா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று ஆஜராகி கூறியதாவது:

தமிழகத்தில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை அமல்படுத்த ஆளுனரிடம் தமிழக அரசு ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாக உள்ளது. நீதிபதி கலையரசன் குழு பரிந்துரையை அமல்படுத்தாமல் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டால் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

எனவே, நீதிபதி கலையரசன் குழு பரிந்துரையை அ மல்படுத்தாமல் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். இதை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து இவ்விவாகரம் தொடர்பாக இன்று பிற்பகல் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT