தருமபுரி மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட பெண் காவலர்கள் அடங்கிய குழுவினரின் வாகனத்தை சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன், எஸ்.பி பிரவேஸ்குமார் உள்ளிட்டோர். 
தமிழகம்

பெண்களின் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக பெண் போலீஸார் அடங்கிய குழு அமைப்பு: குக்கிராமங்கள் வரை செல்வர் என டிஐஜி தகவல்

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டத்தில் பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி குக்கிராமங்கள் வரை விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல்துறை சார்பில் பெண் காவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நகரும் காவலர் குழுவை மாவட்ட காவல் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழுவில் 1 பெண் காவல் ஆய்வாளர் தலைமையில், 1 பெண் உதவி ஆய்வாளர், 4 பெண் போலீஸார் இடம்பெற்றுள்ளனர்.

பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள், அதுபோன்ற குற்றங்களை சட்டத்தின் உதவியுடன் தடுக்கும் முறைகள், நடந்த குற்றங்கள் தொடர்பாக சட்ட உதவியுடன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்டம் முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்தக் குழுவின் பணி. இந்த குழுவின் செயல்பாடு தொடக்க நிகழ்ச்சி நேற்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஸ்குமார் தலைமை வகித்தார். சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் நிகழ்ச்சியில் பங்கேற்று குழுவின் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். முன்னதாக அவர் பேசியது:

முழுவதும் பெண்கள் அடங்கிய இந்த பெண்கள் பாதுகாப்புக் குழுவினர் மாவட்டத்தின் குக்கிராமங்கள் வரை சென்று பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொள்வர். குடும்ப வன்முறை சம்பவங்கள், வரதட்சணை கொடுமைகள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் போன்ற குற்றங்களை தடுப்பதும், இளம் வயது திருமணங்களை தடுப்பதும், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு அளிப்பதும் இந்த குழுவினரின் முக்கிய பணியாக இருக்கும். விழிப்புணர்வு தகவல்கள் இடம்பெற்றுள்ள துண்டு பிரசுரங்களையும் இவர்கள் கிராமங்கள் தோறும் வழங்குவர். இக்குழு ஆண்டு முழுக்க 24 மணி நேரமும் இயங்கும். இந்த குழுவினரை 95855 85154 என்ற செல் போன் எண்ணில் தொடர்பு கொள்ள முடியும்.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பி குணசேகரன், டிஎஸ்பி-க்கள் அண்ணாதுரை, சீனிவாசன், மேகலா, தனிப்பிரிவு காவல் ஆய் வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT