தமிழகம்

கூட்டுறவு கட்டிட சங்க நிதியில் முறைகேடு; ஆர்.எஸ்.பாரதி மீதான புகார்: 4 வாரத்தில் விசாரிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிட சங்கத்தின் தற்போதைய தலைவரான வி.பரணிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு:

‘‘கடந்த 1996 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிட சங்கத் தலைவராக திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி பொறுப்பு வகித்தார்.

அப்போது கூட்டுறவு கட்டிட சங்க நிதியில் இருந்து வணிக வளாகம் கட்டியதில் ரூ.7.64 லட்சம் முறைகேடு செய்துள்ளதாகக் கூறி அவர் மீது கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரகாரம் நடவடிக்கை எடுக்க கூட்டுறவு சங்கப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இதுதொடர்பாக கடந்த 2004-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்க துணைப் பதிவாளரும் நோட்டீஸ் பிறப்பித்துள்ளார். ஆனால் அதன்பிறகு இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே இந்த விசாரணையை விரைந்து முடிக்க கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பான புகார் குறித்த விசாரணையை 8 வார காலத்துக்குள் முடித்து அக். 12-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக விசாரிக்க மேலும் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான புகாரை 4 வார காலத்துக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT