அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா, பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
சிறப்பு அந்தஸ்து (Institute ofEminence) என்பது நிர்வாக கட்டமைப்பை மாற்றி அமைப்பதற்காக உருவாக்கப்பட்டது அல்ல.இது மிகப்பெரிய ஆராய்ச்சி நிதி திட்டம் ஆகும். இதன்மூலம் பல்கலைக்கு ரூ.1,500 கோடி நிதி கிடைக்கும். ஆராய்ச்சி, கற்பித்தல், கற்றல், புதுமை கண்டுபிடிப்பு, மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புதல் ஆகியவற்றை வலுப்படுத்த அந்த நிதி பயன்படும்.
முதல்வர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதன் அடிப்படையிலும், பல்கலை இரண்டாக பிரிக்கப்பட்டால் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பிரச்சினை வந்துவிடுமோ என்று விளக்கம் கேட்டும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினேன். அதற்கு, மாநில அரசு சட்டத்தின்படி இடஒதுக்கீடு நடைமுறைகள் பின்பற்றப்படுவதற்கு எந்த தடையும் இருக்காது என்று மத்திய அரசு பதில் எழுதி இருந்தது. எனவே, சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் நிர்வாகம், இடஒதுக்கீட்டில் எந்த பிரச்சினையும் இருக்காது என்பது தெளிவாக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு நான் எழுதிய கடிதம் குறித்து அரசு விளக்கம் கேட்டது. அதன் நகலை அரசிடம் கொடுத்துள்ளேன். பல்கலையின் வளர்ச்சி, நலனுக்காக என் முயற்சி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.