தமிழகம்

தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.10,775 கோடியை உடனே மத்திய அரசு வழங்க வேண்டும்: அமைச்சர் டி.ஜெயக்குமார் கோரிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ.10,774 கோடியே 98 லட்சத்தை உடனேவழங்க வேண்டும் என்று மத்தியநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் டி.ஜெயக்குமார் கோரிக்கை விடுத்தார்.

சரக்குகள், சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மன்றத்தின் 42-வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதன் தொடர் அமர்வு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், காணொலி வாயிலாகதமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்றார். அவருடன், நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன், வணிகவரித் துறை செயலர் பீலா ராஜேஷ், வணிகவரி ஆணையர் சித்திக் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக ஏற்படும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு கடன் பெற்றுமாநிலங்களுக்கு வழங்குவது சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது. தொடர்ந்து வழங்கிய 2 விருப்பத் தேர்வுகளிலும், மாநிலங்கள்தான் கடன் பெற்றாக வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. மத்திய அரசு கடன் பெற்றுத்தர முன்வராததால், 2 விருப்பத் தேர்வுகளில் ஒன்றை தமிழகம் தேர்வு செய்யவேண்டிய நிலை எழுந்துள்ளது.

கரோனா தொற்று நிலவிவரும் இந்த நேரத்தில், ஒருமித்த கருத்துஎட்டப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு கவனம் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் முதலாவது விருப்பத் தேர்வை ஏற்றுள்ளது. இந்த விவகாரத்துக்கு விரைவாக தீர்வு கண்டு, மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்கினால், பொருளாதாரத்தை உடனடியாக புதுப்பிக்க முடியும்.

கடந்த வாரம் தமிழகத்துக்கு இழப்பீடாக ரூ.1,483 கோடி வழங்கியதற்கு நன்றி. தமிழகத்துக்கு கடந்த ஜூலை வரையிலான இழப்பீட்டுத் தொகை ரூ.10,774 கோடியே 98 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும். 2017-18 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.4,321 கோடியை விரைவில் வழங்க உறுதி அளித்ததற்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT