தமிழகம் முழுவதும் அனைத்து பிரேதப் பரிசோதனை அரங்குகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பிரேதப் பரிசோதனைகள் நடக்கின்றன. விதிப்படி தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆனால் மதுரை, செங்கல்பட்டு, சென்னை ஆகிய 3 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே தடயவியல் நிபுணர்கள் உள்ளனர். பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட அன்றே அதன் அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஒரு மாதத்துக்கு பிறகே நீதிமன்றத்துக்கு பிரேதப் பரிசோதனை அறிக்கையை அனுப்புகின்றனர். இதனால் பிரேதப் பரிசோதனையில் சந்தேகம் ஏற்படுகிறது.
பெரும்பாலான மருத்துவமனைகளில் டாக்டர்கள் இல்லாமல் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்களே பிரேத பரிசோதனை செய்கின்றனர். ஆனால் மருத்துவர் முன்னிலையில் நடந்ததாக அறிக்கை அளிக்கின்றனர். பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மருத்துவ விதிப்படி பிரேத பரிசோதனை முடித்த அன்றே நீதித்துறை நடுவர் மற்றும் துறைத் தலைவருக்கு பிரேத பரிசோதனை அறிக்கை அளிக்க வேண்டும். தவறும் மருத்துவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து சுகாதாரத்துறை செயலர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
பிரேதப் பரசோதனை அறிக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டல் அடிப்படையில் இருக்க வேண்டும். மருத்துவமனை உள்ளிட்ட அரசு ஊழியர்களின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையில் இருக்க வேண்டும். இந்த முறையில் தான் பணிக்கு வராத நாட்களுக்கான ஊதியத்தை குறைத்து பணிக்கு வந்த நாட்களுக்கு மட்டும் ஊதியம் வழங்க முடியும்.
இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கேட்டுக்கொண்டால் பிரேத பரிசோதனைகள் வீடியோ பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக பிணவறை முன்பு விளம்பரம் செய்ய வேண்டும். பிணவறை மற்றும் பிரேத பரிசோதனை அரங்களில் முக்கிய பகுதிகளில் சிசிடிவி காமிரா பொருத்த வேண்டும். அந்த காமிராக்கள் எல்லா நேரமும் இயங்க வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் பிரேத பரிசோதனை செய்வதற்கான கருவிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் இருப்பதை அரசு 6 மாதத்தில் உறுதி செய்ய வேண்டும். ஹரியானா மாநிலத்தில் உள்ள போது தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஜன. 1 முதல் மெட்லீபிஆர் இணையதள அடிப்படையில் விபரங்களை கையாள வேண்டும்.
அனைத்து மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அறிவியல் அலுவலரை நியமிக்க வேண்டும். தடயவியல் நிபுணர்குழு அமைத்து அறிவியல் அலுவலரின் தகுதி மற்றும் பணி ஆகியவற்றை வரையறுக்க வேண்டும். இதற்காக ஒரு ஆண்டில் நிபுணர் குழு அமைக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.