கேரள மாநிலத்தில் அமலில் இருப்பது போல் தமிழகத்திலும் நூறு நாள் வேலை திட்டப்பணியாளர்களை தனியார் விவசாய நிலங்களில் விவசாயப் பணி மேற்கொள்ள அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை பேரையூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணி, குளம் வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.
சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் ஆத்தங்கரையோரம் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. ஊராட்சி துணைத் தலைவர், அரசு பேருந்து ஓட்டுநர் உள்ளிட்டோரும் நூறு நாள் வேலை திட்டத்திற்கான அடையாள அட்டை பெற்றுள்ளனர். எனவே நூறு நாள் வேலை திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கிராமங்களின் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் நூறு நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை.
இத்திட்டத்தில் வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் வேலையே செய்யாமல் வேலை பார்ப்பது போல் ஏமாற்றுகின்றனர். பல இடங்களில் நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் வேலை செய்யும் இடத்தில் தூங்கி பொழுபோக்குகின்றனர். ஏழைகளின் வாழ்வை முன்னேற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டத்தின் நோக்கத்தை, சரியாக வேலை செய்யாமல் மக்கள் தோற்கடித்து வருகின்றனர்.
நூறு நாள் வேலை திட்டத்தில் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்காத நிலை உள்ளது. கேரளாவில் தனியார் விவசாய நிலங்களில் நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களை வைத்து பணிகளை மேற்கொள்கின்றனர். இதற்கான தொகையை சம்பந்தப்பட்ட தனியார்கள் அரசிடம் வழங்குகின்றனர்.
அதேபோல் தமிழகத்திலும் நூறு நாள் திட்ட பணியாளர்களை கொண்டு தனியார் விவசாய நிலங்களில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள ஏன் அனுமதிக்கக்கூடாது. இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றனர்.
பின்னர், விசாரணையை நவ. 3-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.