நெல்லையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலையில் கீழமை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 4 பேருக்கு உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.
நெல்லை மாவட்டம் ரெட்டியார்புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் முன்விரோதம் காரணமாக 2010-ல் கொலை செய்யப்பட்டார். கொலையை தடுக்க முயன்ற ராஜேந்திரன் மகன்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இந்தக் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த விஜயன், ஐசக், அன்புராஜ், ரெபன்ஸ் சாமுவேல்ராஜ், ஜஸ்டின், முருகேசன் ஆகியோரை வீரவநல்லூர் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கை நெல்லை நீதிமன்றம் விசாரித்து 6 பேரையும் விடுதலை செய்து 2012-ல் உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரன் மகன் கதிரேசன் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி அமர்வு, விஜயன், ஐசக், அன்புராஜ், ரெபன்ஸ் சாமுவேல்ராஜ், ஜஸ்டின் ஆகியோரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும், முருகேசன் விடுதலையை உறுதி செய்வதாகவும் அறிவித்தது.
பின்னர் தண்டனைக்காக விஜயன் உள்ளிட்ட 5 பேரையும் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் விஜயன் உயிரிழந்தார்.
ஐசக், அன்புராஜ், ரெபன்ஸ் சாமுவேல்ராஜ், ஜஸ்டின் ஆகியோரை போலீஸார் இன்று உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினர். 4 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.