குமரியில் இருந்து திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்கு சுவாமி சிலைகளை பாரம்பரிய முறைப்படி பல்லக்குகளில் சுமந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்கிரகம் நாளை போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் திருவனந்தபுரத்திற்கு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, வேளிமலை முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்கள் மன்னரின் உடைவாள் ஏந்திய பவனியுடன் கொண்டு செல்லப்படும். பத்மநாபசுவாமி கோயில் அருகே கிழக்கு கோட்டேயகத்தில் நவராத்திரி விழாவில் பூஜைக்கு வைக்கப்பட்டு பின்னர் பூஜை முடிந்த பின்னர் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு அந்தந்த கோயில்களில் சுவாமி விக்ரகங்கள் வைக்கப்படும்.
தமிழக, கேரள இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சுவாமி விக்ரகங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் சுவாமி விக்ரகங்களை ஒரே நாளில் வாகனங்களில் எடுத்து சென்று திருவனந்தபுரத்தில் பூஜைக்கு வைக்க இரு மாநில அதிகாரிகளும் முடிவு செய்திருந்தனர்.
இதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பாரம்பரிய முறைப்படி நடத்த வலியுறுத்தி தக்கலையில் பாஜக, இந்து முன்னணி உட்பட இந்து அமைப்பினர்
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தினர். மேலும் காங்கிரஸ் உட்பட பிற கட்சியினரும் இதே கருத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் இந்து அமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் இருந்து கேரள தேவசம் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், மற்றும் அதிகாரிகள் தலைமையில் நவராத்திரி விழாவை பாரம்பரிய முறைப்படி நடத்துவது குறித்து காணொளி காட்சி மூலம் குமரி மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. இதில் பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் சரண்யா அறி, தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில், பாரம்பரியம் மாறாமல் திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்கு செல்லும் சுவாமி விக்ரகங்களை வழக்கம்போல் பக்தர்கள் தோளில் சுமந்து பவனியாக செல்லவும், மன்னரின் உடைவாள், மற்றும் போலீஸ் அணிவகுப்பு மரியாதை உட்பட அனைத்து நிகழ்வுகளும் சமூக இடைவெளியுடன் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து 14ம் தேதி சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்திற்கு பாரம்பரிய முறைப்படி புறப்பட்டு செல்கிறது. இதைத்தொடர்ந்து இதன் முதல் நிகழ்வான சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நாளை காலை 8 மணியளவில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் முன்பிருந்து துப்பாக்கி ஏந்திய இரு மாநில போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையுடன் பத்மநாபபுரம் அரண்மனைக்கு புறப்பட்டு வருகிறது.
யானை பவனிக்கு மட்டும் தடை!
பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து மன்னரின் உடைவாள் ஏந்திய பவனியுடன் சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் செல்லும் நிகழ்வில் வழக்கமாக யானை மீது தேவாரக்கட்டு சரஸ்வரதி தேவி விக்ரகம் பவனியாக கொண்டு செல்லப்படும். சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மனும், வேளிமலை முருகனும் பல்லக்கில் பக்தர்களால் சுமந்து செல்லப்படும். ஊரடங்கின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் யானை பவனிக்கு மட்டும் இரு மாநில அரசும் அனுமதியை மறுத்துள்ளன. இதனால் சரஸ்வதி விக்ரகமும் இந்த ஆண்டு பல்லக்கிலே பவனியாக கொண்டு செல்லப்படுகிறது. அதே நேரம் பிற நிகழ்வுகள் அனைத்தும் எப்போதும் போல் நடைபெறவுள்ளது.