சங்கரன்கோவில் அருகே உள்ள ஆயாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் நிலை என்னவானது எனக் கோரி உறவினர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆயாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முல்லைராஜ். இவர், கடந்த 9 ஆண்டுகளாக ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார்.
தற்போது ஜம்மு காஷ்மீரில் பணியாற்றினார். இந்நிலையில், நேற்று முல்லைராஜ் இறந்துவிட்டதாக அவரது தாயார் அழகம்மாளுக்கு முல்லைராஜுடன் வேலை பார்ப்பவர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் முல்லைராஜின் குடும்பத்தினர் சரியான தகவல் தெரியாமல் திகைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்ட அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, சென்னையில் உயர் அதிகாரிகளுடன் பேசி விரைந்து நடவடிக்கை எடுத்து முல்லைராஜின் நிலை குறித்து சரியான தகவல்களை அவரது குடும்பத்திற்கு தெரிவித்து மேல் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், ராணுவ வீரர் முல்லைராஜ் குறித்து விசாரித்து உரிய தகவல் கிடைக்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஆயாள்பட்டி கிராம மக்கள் ஏராளமானோர் சங்கரன்கோவிலுக்கு திரண்டு சென்று, ஆட்சியரிடம் மனு அளித்தனர். ராணுவ வீரர் முல்லைராஜ் நிலை குறித்து தகவல் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
கோரிக்கை மனுக்களுக்கு வாட்ஸ் அப் எண்:
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திங்கள்கிழமைதோறும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம் என்றும், 9443620761 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலமும், collector.grievance@gmail.com என்ற இமெயில் மூலமாகவும், https://gdp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளள் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், 8 வகையான ஒய்வூதிய திட்டங்களுக்கு http:edistricts.tn.gov.in8443/cetificates-csc என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் மட்டுமே விண்ணபிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வட்டாட்சியர் அலுவலகங்களில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்ய துணை ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுழற்சி முறையில் ஆட்சியரும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரில் சென்று மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்வதுடன், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொள்கிறார்.
அதன்படி, சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை ஆட்சியர் பெற்றுக்கொண்டார். இதில், ‘சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் வாசலில் கடந்த 200 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும். நகரின் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
சங்கரன்கோவில் சார்நிலைக் கருவூலம் பின்புறம் செயல்பட்டு வந்த மிகவும் பிற்படுத்தபட்டோர் மற்றும் சீர்மரபினர் தங்கும் விடுதி இடிக்கப்பட்டு தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வருவதால் ஏற்கெனவே செயல்பட்டு வந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மனு அளித்தனர்.
குறைதீர் கூட்டத்தில், சங்கரன்கோவில் கோட்டாட்சியர் முருகசெல்வி, தென்காசி கோட்டாட்சியர் பழனிக்குமார், சங்கரன்கோவில் வட்டாட்சியர் ஆதிலெட்சுமி, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் முகைதீன் அப்துல்காதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.