ஏற்காட்டில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா பரவல் தடுப்புக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் வீட்டிலேயே அடைபட்டிருந்த மக்கள் தற்போதைய ஊரடங்கு தளர்வை தொடர்ந்து சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் ஏற்காடு சுற்றுலா தலம் பயணிகள் வருகை அதிகரிப்பால் மீண்டும் இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பி வருகிறது. ஆனால், கரோனா பரவல் தடுப்புக்காக, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, வெளிமாவட்டத்தினர் இ-பாஸ் பெற்று வரவேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
கடந்த மாதத்தில், ஏற்காட்டுக்கு கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பயணிகள் ஏராளமானோர் வந்தனர். ஆனால், பலர் இ-பாஸ் எடுக்காமல் வந்ததால், ஏற்காடு மலையடிவார சோதனைச் சாவடியில் போலீஸாரால் தடுக்கப் பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். தற்போது, இ-பாஸ் பெற்று பயணிகள் ஏராளமானோர் ஏற்காடு வரத் தொடங்கியுள்ளனர். இதனால், பழைய நிலைக்கு ஏற்காடு நகரத் தொடங்கியுள்ளது.
களைகட்டிய ஏற்காடு
ஞாயிறு விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. இதனால், அண்ணா பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா, ஏரிப் பூங்கா, காட்சிமுனை உள்ளிட்ட பார்வையிடங்கள் அனைத்தும் பயணிகள் வருகையால் களைகட்டியது. பயணிகளை ஈர்க்கும் வகையில் ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பனிமூட்டமும் சூழ்ந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக ஏற்காடு மக்கள் கூறும்போது, “ஏற்காட்டில் வசிப்பவர்கள் பலர் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளனர். கரோனா கால ஊரடங்கினால் சுற்றுலா தொழில் முற்றிலும் முடங்கி, எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
தற்போது, ஏற்காடு இயல்பு நிலைக்கு மெல்ல திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், இ-பாஸ் நடைமுறையால் பயணிகள் வருகை கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், படகு சவாரிக்கு தடை நீடிக்கிறது. இத்தடையை நீக்கினால் தான் முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பும்” என்றனர்.
ரத்து செய்ய வேண்டும்
இதேபோல சுற்றுலா பயணிகள் சிலர் கூறும்போது, “வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து பலர் இ-பாஸ் நடைமுறை தெரியாமல் வந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால், அவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க கரோனா கட்டுப்பாடு களை தீவிரப்படுத்தி, இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்” என்றனர்.