தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், 2.2 லட்சம் கோரிக்கைகள் மத்திய, மாநிலத் தகவல் உரிமை ஆணையங்களில் நிலுவையில் உள்ளன என்ற தகவலைச் சுட்டிக்காட்டி, வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ், அரசுத் துறைகள் மற்றும் அரசு உதவி பெறும் துறைகளின் கீழ் பல்வேறு தகவல்களைப் பெற முடியும். இச்சட்டம் இயற்றப்பட்டு 15 ஆண்டுகளான நிலையில், தற்போது வரை, பல்வேறு மத்திய, மாநிலத் தகவல் உரிமை ஆணையங்களில் 2.2 லட்சம் கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இன்று (அக். 12) தன் ட்விட்டர் பக்கத்தில், "தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2.2 லட்சம் கோரிக்கைகள் இன்றும் மத்திய, மாநிலத் தகவல் உரிமை ஆணையங்களில் நிலுவையில் உள்ளன. வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும். ஒவ்வொரு குடிமகனும் தமக்கான உரிமையினைப் பெறத் தெளிந்தால், நாமே தீர்வு" எனப் பதிவிட்டுள்ளார்.