சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.படம்: பிடிஐ
சென்னை: ‘‘தமிழக அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளைக் குறைக்க, 59 திமுக எம்எல்ஏக்களுக்கும் கார் வேண்டாம்’’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை நேற்று காலை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வரே தெரிவித்துள்ளதால், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி திமுகவைச் சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் முதல்வர் வழங்கும் வாகனத்தைப் பெறுவதில்லை என முடிவெடுத்துள்ளோம்.
அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவை குறைக்கும் நோக்கில், பொருளாதாரத்தில் நலிவடைந்த எம்எல்ஏக்களுக்கு மட்டுமே வாகனம் வழங்க வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம் வருமாறு:
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: ஏழ்மையான எம்எல்ஏக்கள் பலர் பேருந்தில் வந்து செல்கின்றனர். அமைச்சர்கள் எல்லோரிடமும் கார் உள்ளது. நாங்கள் யாரும் கார் கேட்கப் போவதில்லை. ஏழ்மையான எம்எல்ஏக்கள் வேண்டுகோள் விடுப்பது அவர்களின் உரிமை. அரசு வழங்கும் வாகனத்தில் சென்றால் ஒரு மரியாதை இருப்பதாக எம்எல்ஏக்கள் கூறுகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவரிடம் 2, 3 வீடுகள் உள்ளன. அவருக்கு வீடுகள் இருப்பதால் அரசுத் துறை பங்களா தரமுடியாது என்று கூற முடியுமா? அமைச்சர்களுக்குக் கார், வீடு, 4 உதவியாளர்கள் தரப்படுகின்றனர். எம்எல்ஏக்களுக்கு உதவியாளர்கள், வீடு கிடையாது.
நீங்கள் உங்கள் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், கார் இல்லை, ரூ.10 ஆயிரம்தான் பணம் இருக்கிறது என்று கூறலாம். ஆனால், எங்கள் கட்சி எம்எல்ஏக்களில் பலர் சொந்த வீடு, கார் இல்லாமல் இருக்கின்றனர். தவெகவினரில் ஏற்கெனவே கார் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க மாட்டார்கள். ஊழல் இல்லாத எம்எல்ஏக்கள், மக்களைச் சென்று பார்க்க கார் தேவை.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு: எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சர் அந்தஸ்தில் இருப்பதால் அவருக்கு அரசு இல்லம் வழங்கப்படுகிறது. அது அவர் உரிமை. கார் வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். இதை தவிர்த்து விட்டு எங்களிடம் கார் இல்லை. ரூ.10 ஆயிரம்தான் உள்ளது என்று நாங்கள் குறிப்பிட்டதாக கூறுகின்றனர். அப்படி என்றால் இதுகுறித்து வழக்கு போடுங்கள். தேர்தல் நேரத்தில் இருப்பதைத்தானே பிரமாணப் பத்திரத்தில் கூறுகிறோம். அமைச்சர் சொந்த வீட்டில் இருக்கிறார். ஆனால், அரசாங்கம் அவரது வீட்டுக்கு வாடகை தருகிறது. அதை வேண்டாம் என்று எழுதிக் கொடுங்கள்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: எம்எல்ஏக்களுக்கு வசதி வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்கான முயற்சியை ஆடம்பரம் என்ற கோணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். அரசின் நிதி நிலைமை எங்களுக்கும் தெரியும். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ரூ.10 ஆயிரம்தான் என்று சொல்லிவிட்டு ரேஞ்ச் ரோவர் காரில் செல்லும் ஆட்கள் நாங்கள் இல்லை.
டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): கோரிக்கை வைத்துள்ள எம்எல்ஏக்களுக்குக் கார் தரட்டும். ஆனால், எம்எல்ஏக்களுக்குக் கார் தேவையில்லை என்பது எங்கள் நிலைப்பாடு.
கணேஷ்குமார் (பாமக): பொருளாதாரத்தில் பின்தங்கிய எம்எல்ஏக்களுக்கு மக்கள் பணி செய்வதற்குக் கார் அவசியம்தான். சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாருக்குத் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு வழங்கலாம்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: கஜானாவைத் துடைத்துவிட்டு சென்றார்கள் என்பதுதான் தொடர்ந்து வைக்கப்படும் குற்றச்சாட்டு. அனைத்தையும் இலவசமாக திமுக கொடுக்கிறது என்று குற்றம் சாட்டிவிட்டு, தற்பொழுது நீங்களும் காரை இலவசமாகக் கொடுக்கிறீர்கள். ஆனால், தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கார் இல்லை என்று குறிப்பிட்டுள்ளவர்களுக்கு மட்டும் கார் வழங்குங்கள் என்பதுதான் எங்கள் ஆலோசனை. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
கோப்புகளைத் திறக்கலாம்
சட்டப்பேரவையில் உதயநிதி பேசியதாவது: பேரவையில் 19-ம் தேதி பேசிய முதல்வர் தனது அறை மேசையில் 3 கோப்புகள் இருப்பதாகவும், அதை திறந்து பார்க்க வைத்து விடாதீர்கள் என்றும், திமுக ஆட்சியைக் குற்றம் சாட்டும் வகையில் பேசியிருந்தார். தயவு செய்து முதல்வர் அவற்றைத் திறந்து பார்க்க வேண்டும்.
ஆதாரம் இருந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோப்புகளைத் திறக்க ஏன் பயப்படுகிறீர்கள். ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள். இதையே 3 மாதமாகக் கூறி வருகிறீர்கள். ஜோசியக்காரர் சொன்னால்தான் கோப்பை திறப்பீர்களா? நல்ல நேரம் பார்க்கிறீர்களா? இந்த உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் திமுக அஞ்சாது. இவ்வாறு உதயநிதி பேசினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘‘மிசாவையே பார்த்தது எங்கள் இயக்கம் என்றார் எதிர்க்கட்சித் தலைவர். அப்படிப்பட்ட திமுகவைக் வெற்றி கண்டு, தவெக என்றால் என்ன என்பதைக் காண்பித்துள்ளார் எங்கள் தலைவர். எங்களுக்கு எந்த பயமும் இல்லை. நெடுஞ்சாலை, பொதுப்
பணித் துறை வெள்ளை அறிக்கை முதல்வர் அறையில் இருக்கின்றன. கண்டிப்பாக ஆதாரத்துடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் முதல்வர் சொல்ல வந்தார்’’ என்று தெரிவித்தார்.