குஷ்பு 6 மாதங்களாக கட்சிக்கு விரோதமாக, தலைமைக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தார். அவர் அரசியல் தலைவரல்ல. ஒரு நடிகை என்பதாகவே தொண்டர்கள் பார்த்து ரசித்தனர். அவர் செல்வதால் கட்சிக்கு ஒன்றும் இழப்பில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு திமுகவில் இணைந்தார், அங்கு பிரச்சினை ஏற்பட்டதால் காங்கிரஸுக்குத் தாவினார். காங்கிரஸ் தலைவர்களில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கோஷ்டியில் குஷ்பு இருந்தார். சீனியர்கள் பலர் இருக்க காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தித் தொடர்பாளர் என்கிற உயர்ந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
அதன் பின்னர் காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு சர்ச்சைகள் குஷ்புவால் எழுந்தன. ட்விட்டரில் பிரபலமான குஷ்பு காங்கிரஸ் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை, பாஜக ஆதரவு கருத்துகள் சிலவற்றைப் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் குஷ்புவும் வேறு வேறு கோஷ்டியில் இருந்தனர். இதனால் தமிழக காங்கிரஸ் தலைமையுடன் ஒட்டாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் அவர் இன்று பாஜகவில் இணைவதாகத் தகவல் வெளியானது. டெல்லிக்குச் சென்றுள்ள குஷ்பு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி குஷ்புவிடமிருந்து பறிக்கப்பட்டது. உடனடியாக அவர் காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்து பொறுப்புத் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதத்தை அனுப்பினார்.
குஷ்பு காங்கிரஸிலிருந்து விலகியது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“கடந்த 6 மாதங்களாக கட்சிக்கு விரோதமாக, கட்சி நிலைப்பாட்டுக்கு விரோதமாக, தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகவே கருத்துகளைப் பதிவிட்டுள்ளார் குஷ்பு. கட்சியில் மாறுபட்ட கருத்துகள், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதைக் கட்சிக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். இதைவிட காங்கிரஸில் உயர்ந்த பொறுப்பு அவருக்குக் கிடைக்காது, அவர் சென்றதால் எந்த இழப்பும் கட்சிக்குக் கிடையாது. எந்தக் காலத்திலும் அவரால் காங்கிரஸுக்கு லாபம் இல்லை.
காங்கிரஸுக்கும் அவருக்கும் எந்த உறவும் கிடையாது. அவர் தாமரை இலைத் தண்ணீராகத்தான் கட்சியில் இருந்தார். அவரை ஒரு நடிகையாகத்தான் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பார்த்து ரசித்தார்களே தவிர அரசியல் தலைவராக அவரைப் பார்க்கவில்லை.
காங்கிரஸ் இயக்கம் சிந்தாந்த ரீதியாக, கொள்கை ரீதியான 100 ஆண்டுகளைக் கடந்த பேரியக்கம். இதைப்போன்ற தனி மனிதர்கள் செய்கையால் ஒருபோதும் பலவீனமடையாது. இப்பொழுதுகூட இவராகத்தான் போய் பாஜகவில் இணைகிறாரே தவிர அவர்கள் யாரும் இவரை அழைத்ததாகத் தெரியவில்லை.”
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.