தமிழகம்

முதல் இந்திய நீதிபதி மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிறந்த நாளில் பொலிவு பெற்ற கல்லறை

கரு.முத்து

மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள அவரது கல்லறை, சமூக ஆர்வலர்களால் சுத்தம் செய்யப்பட்டுப் பொலிவு பெற்றது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தரங்கம்பாடி நீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம் முதல் இந்திய நீதிபதியாகப் பதவியேற்றவர் வேதநாயகம் பிள்ளை. பின்னர் சீர்காழி, மயிலாடுதுறை உட்படப் பல்வேறு ஊர்களில் பணிபுரிந்தாலும் மாயூரத்தின் மேல் கொண்ட அன்பால், தனது பெயருக்கு முன்னால் அதனைச் சேர்த்துக்கொண்டு மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று ஆனவர்.

தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரம் உட்படப் பல்வேறு நூல்களை எழுதியவர். பல்வேறு ஊர்களில் பணிபுரிந்தாலும், தான் இறந்த பிறகு மாயூரத்தில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார்.

அதன்படியே 1.7.1889-ல் அவர் மறைந்த பிறகு அவரது உடல் மாயூரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நகரில் உள்ள கல்லறைத் தோப்பில் இருக்கும் அவரது நினைவிடம், நாளடைவில் பராமரிப்பு இன்றி செடிகள், புதர்கள் மண்டிக் கிடக்கும் இடமாக மாறியது. நேற்று (அக்.11) அவரது பிறந்த நாளை முன்னிட்டு அங்கு சென்ற மயிலாடுதுறை ஒருங்கிணைந்த அறக்கட்டளை அமைப்பின் நிர்வாகிகள் அ.அப்பர்சுந்தரம், கிங் பைசல், ஜெகமுருகன், ஜோதிராமன், பெருஞ்சேரி முகிலன், லோகேஸ்வரன், சேகர், ரஜினிபாஸ்கர், தங்கராஜ், ஆகியோர் உடனடியாக அதனைச் சுத்தப்படுத்த முடிவெடுத்தனர்.

கல்லறையைச் சுத்தம்செய்து செடி, கொடிகளை அகற்றிச் சுண்ணாம்பு அடித்துப் புதுப்பித்தனர். அந்த இடத்தில் உள்ள கல்வெட்டு, புதருக்குள் புதைந்து கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 150 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள எழுத்துகள் அனைவருக்கும் தெரியும் வகையில் வண்ணம் பூசப்பட்டது.

அதனால் புதுப் பொலிவுடன் காணப்பட்ட வேதநாயகம் பிள்ளையின் கல்லறையை அங்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் பார்த்துவிட்டு, அதற்குக் காரணமான ஒருங்கிணைந்த அறக்கட்டளையினருக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். "விரைவில் மேடைக்கு அருகில் உள்ள மண்டபமும் மயிலாடுதுறை அறக்கட்டளைகளின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சீரமைக்கப்படும்" என்று அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT