ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கான வயது வரம்பு குறித்த அரசாணையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, வாசன் இன்று (அக்.12) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாட்டில் அரசு ஆசிரியர் பணி நியமத்திற்கு வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. பல லட்சக்கணக்கானவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்காகத் தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றவர்கள் சுமார் 7.5 லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களில் 40 சதவீதத்தினர் 40 வயதைக் கடந்தவர்களாக இருக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் பங்கேற்க வயது வரம்பு இல்லாத நிலையில், வேலையில் சேர மட்டும் வயது வரம்பு நிர்ணயித்து இருப்பதால் பல்லாயிரக்கணக்கானோர் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
தற்போது தமிழகத்தில் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பணியிடம் காலியாக இருக்கிறது. ஆண்டுதோறும் ஆசிரியர் பணியிடங்களின் தேவைக்கு ஏற்ப வேலைவாய்ப்பை அளித்து இருந்தால், காத்திருப்பவர்களின் கனவுகள் நிறைவேறி இருக்கும். ஆனால், பல ஆண்டுகளாக பணியிடம் நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், இந்த அறிவிப்பு ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களிடையே மிகுந்த மனவேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஆசிரியர் பணி என்பது மகத்தான பணி, சேவை மனப்பான்மையோடு வருங்காலத் தூண்களாக விளங்க இருக்கும் மாணவர்களை உருவாக்கும் உன்னதப் பணி. இப்பணிக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கானோரின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, தமிழக அரசு ஆசிரியர் பணி நியமனத்திற்கு, வயது வரம்பை நிர்ணயிக்கும் அரசாணையை, அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.