தமிழகம்

சின்டெக்ஸ் தொட்டி அமைக்க ரூ.7.7 லட்சமா? - ‘வாட்ஸ்-அப்’ தகவலுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பதில்

செய்திப்பிரிவு

திருப்பூரில் குடியிருப்புப் பகுதியில் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்க ரூ.7.7 லட்சம் செலவா? என சமூக வலைதளங்களில் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் அதற்கு விளக்கமளித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட 50-வது வார்டு ஈஸ்வரமூர்த்தி லே-அவுட் முதல் வீதியில் ஏற்கெனவே உள்ள கைப்பம்பினை அகற்றி மின்மோட்டார் பொருத்தி, ஈஸ்வரமூர்த்தி லே-அவுட் மற்றும் முத்து விநாயகர் கோயில் வீதிகளில் தண்ணீர் வசதி செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் திட்டத்தின் ஒருபகுதியாக அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தொட்டியில், மாநகராட்சி தண்ணீர் தொட்டி திறப்பு விழா என்றும், திட்ட மதிப்பீடு ரூ.7.7 லட்சம் என்றும் எழுதப்பட்டிருந்தது.

இதை புகைப்படம் எடுத்த ஒருவர், ‘உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தண்ணீர் தொட்டியை திறந்து வைத்தவர் சு.குணசேகரன்’ என்று குறிப்பிட்டு முகநூலில் பதிவிட்டிருந்தார். இதை திருப்பூரை சேர்ந்த பலரும் முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில், ‘‘முகநூலில் பதிவிட்டிருந்த சகோதரர் இந்த சின்டெக்ஸ் வைக்க ரூ.7.7 லட்சமா என்றும், கொள்ளையா என்றும் கேள்விஎழுப்பியிருந்தார். இதைப் பற்றி விசாரித்தபோது, மொத்த திட்டத்துக்கான செலவையே அதில் குறிப்பிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்த திட்ட செலவு விவரத்தை வாங்கி, முகநூலில் பதிவிட்ட நண்பருக்கு எனது உதவியாளர்கள் மூலமாக அனுப்பிவிட்டேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT