சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் வகையில் திமுக சார்பில் திருச்சியில் விரைவில் முப்பெரும் விழா நடத்தப்படும் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் தில்லைநகரில் நேற்று நடைபெற்றது. அவைத்தலைவர்கள் தர்மலிங்கம் (மத்திய), அம்பிகாபதி (வடக்கு) ஆகியோர் தலைமை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியது:
திமுகவின் முப்பெரும் விழாவை திருச்சியில் நடத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். விரைவில் நடைபெற உள்ள இவ்விழாவில் திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளில் பல்வேறு இடங்களிலிருந்து காணொலி மூலம் 1 லட்சம் பேர் கலந்துகொள்ளும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், கட்சியின் தலைவர்மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து ஜூம் செயலி மூலம் சிறப்புரையாற்றுவார்.
மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவதற்கான சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் வகையில் இந்த முப்பெரும் விழா அமையும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கட்சியின் நிர்வாகிகளுக்கு இக்கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்படும்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சித் தலைவர் அவமதிப்பு செய்யப்பட்ட நிகழ்வு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அந்த ஊராட்சித் தலைவருக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்றார்.
இதில், வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன், மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, பரணிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.