கலாம் கல்வி மைய அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாமின் கனவு ஆண்டையொட்டி பல்வேறு சமூக சேவையாற்றிய 100 பேருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கலாம் கல்வி மைய அறக்கட்டளை சார்பில், அப்துல் கலாம் கனவு ஆண்டாக கருதப்படும் 2020-ம் ஆண்டையொட்டி பல்வேறு சமூக சேவையாற்றிய 100 பேருக்கு சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் விநாயகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், பெரும்புதூர் ஏஎஸ்பி கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சமூக சேவையாற்றிய 100 பேருக்கு சாதனையாளர் விருதுகளை வழங்கினார். மேலும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதையடுத்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், அறக்கட்டளையின் செயலர் பிரகாஷ், செங்கல்பட்டு மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் ராமச்சந்திரன், காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, தலைமை ஆசிரியர் அசோகன், ஆசிரியர் தரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.