திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர் பான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்து சமயஅறநிலையத் துறை ஆணையர்பிரபாகர் அனைத்து சார்நிலைஅலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களின் மாத ஓய்வூதியத்தை மாதம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாகவும், ஓய்வூதியம் பெற்றுவரும் ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்கள் இறப்புக்கு பின் நேரடி வாரிசான கணவன், மனைவிக்கு மட்டும் ஓய்வூதியத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்வு செய்து வழங்க ஏற்கெனவே அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் நிலையில் நிர்வகிக்கப்பட்டு வரும் முதுநிலை கோயில்கள் உள்ளிட்ட கோயில்களில் பணிபுரிந்து, துறை நிலையிலான ஓய்வூதியம் பெற்று வரும் பணியாளர்களுக்கு அவரவர் தாம் பணிபுரிந்த கோயில்களிலேயே அக்கோயில் நிதியில் இருந்து ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
அனுமதி பெற வேண்டும்
தற்போது வரை ஓய்வூதியம் பெற்று வரும் நபர்களைத் தவிர, ஓய்வூதியம் பெற வேண்டி வரப்படும் விண்ணப்பங்களை ஆணையர் அலுவலகத்துக்கு சமர்ப்பித்து முதற்கட்ட அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின் அப்பணியாளர்களுக்கு ஓய்வூதியம் அல்லது அவரது குடும்ப வாரிசுதாரர்களுக்கு குடும்ப ஓய்வூதியத்தை கோயில் நிதியில் இருந்து வழங்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் அம்மாதத்தின் கடைசி வேலை நாளில் சம்பந்தப்பட்ட ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட வேண்டும்.
ஆளறிதல் பதிவேடு
ஒவ்வொரு கோயில்களிலும் புதிதாக ஆளறிதல் பதிவேடுதொடங்கி அந்த கோயிலின் உத்தரவிடப்பட்ட ஓய்வூதியதாரர் களின் விவரங்களைப் பதிந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் ஆளறிதல் செய்து ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் ஆணையர் அலுவலகத்தில் இருந்து புதிதாக ஓய்வூதிய ஆணை அனுப்பப்படும் ஓய்வூதியதாரர்களை, அந்தந்த கோயில் செயல் அலுவலர் ஆளறிதல் செய்து ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
முதுநிலை கோயில்கள் உள்ளிட்ட கோயில்களில் எத்தனைபணியாளர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கினார்கள் என்ற விவரத்தை மண்டல இணை ஆணையர்கள் பெற்று தொகுத்து காலமுறை அறிக்கையை தவறாது ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இந்த ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதிய உயர்வானது, அரசாணை வெளியிடப்பட்ட கடந்த ஜூலை 13-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரப்பெற்றுள்ளது.
இவ்வாறு ஆணையர் பிரபாகர் கூறியுள்ளார்.