தமிழகம்

முதல்வரை விமர்சனம் செய்தால் நான் விவசாயி என்கிறார்; செய்யும் வேலை எல்லாம் விவசாயிகளுக்குத் துரோகம்: ஸ்டாலின் பேச்சு

செய்திப்பிரிவு

மக்களைப் பற்றிக் கவலைப்படாத பழனிசாமியை விமர்சித்தால், நான் விவசாயி என்று நித்தமும் புலம்ப ஆரம்பித்துள்ளார். இந்த விவசாயி செய்ததெல்லாம் விவசாயத்துக்குத் துரோகமும் விவசாயிகளுக்குத் துரோகமும் தான். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்ததை விட பெரிய துரோகம் எதுவும் தேவையில்லை

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அக்கட்சியின் தலைவர் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

“விவசாயிகளுக்கு கிசான் திட்டப்படி வழங்கப்படும் நிதியில் 100 கோடி ரூபாய் வரைக்கும் மோசடி நடந்துள்ள மாநிலம் தமிழ்நாடுதான். இந்த மோசடி அதிகமாக நடந்ததும் முதல்வரின் சேலம் மாவட்டத்தில்தான். இதுதான் விவசாயி ஆட்சியா?

சில நாட்களுக்கு முன்னால் பயிர்க் கடனில் நடந்த மோசடி தொடர்பாக கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளது. இதுதான் விவசாயி ஆட்சியா? விளைந்த நெல்லை ஒழுங்காக, முறையாக, முழுமையாக கொள்முதல் செய்யாமல் அவை தேங்கிக் கிடக்கிற காட்சியை சில வாரங்களாக பார்க்கிறோம்.

நெல்லை மூட்டை கட்டுவதற்கு சாக்கு இல்லை, கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை, அதிகாரிகள் இல்லை என்று ஏதாவது சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் விவசாயி ஆட்சியா? மேகேதாட்டு அணையைத் தடுக்கத் தைரியம் இல்லாத இவர் நடத்துவதுதான் விவசாயி ஆட்சியா?

தருமபுரி முதல் திருவண்ணாமலை வரை போராடும் விவசாயிகளைக் கைது செய்த இதுதான் விவசாயி ஆட்சியா? இது விவசாயி ஆட்சி அல்ல. விவசாயிகளைக் கொல்லும் ஆட்சி. விவசாயத்தைக் கொல்லும் ஆட்சி. விவசாயியாக நடிப்பவரின் ஆட்சி. இந்த நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

மக்களைப் பற்றிக் கவலைப்படாத பழனிசாமியை விமர்சித்தால், நான் விவசாயி என்று நித்தமும் புலம்ப ஆரம்பித்துள்ளார். இந்த விவசாயி செய்ததெல்லாம் விவசாயத்துக்குத் துரோகமும் விவசாயிகளுக்குத் துரோகமும் தான். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்ததை விட பெரிய துரோகம் எதுவும் தேவையில்லை. குறைந்தபட்ச ஆதாரவிலை கூட இல்லாத மூன்று சட்டங்களை முட்டிக்கால் போட்டு ஆதரிக்கும் இதுதான் விவசாயி ஆட்சியா?

எடப்பாடி பழனிசாமிக்குத் தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்கவில்லை. ஜெயலலிதா இறந்து போனதால் கூவத்தூரில் பதவியைப் பெற்றவர் பழனிசாமி. பாஜகவின் தயவில் கிடந்து அதனைத் தக்க வைத்துக் கொண்டவர் பழனிசாமி. எனவே, இவர் முதல்வர் ஆவதற்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்கவும் இல்லை. வாக்களிக்கப் போவதும் இல்லை.

இது அவர்களுக்கும் தெரியும். அதனால் தான் இருக்கும் காலம் வரை சுருட்டிக் கொண்டு ஓடுவதற்குத் தயாராகி விட்டார்கள். இவர்கள் எங்கும் தப்ப முடியாது. திமுக ஆட்சி அமையும்போது இவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT