தமிழகம்

தினமும் கூடாமல் குறையாமல் 5,000 எண்ணிக்கையில் கரோனா தொற்று; என்ன கணக்கோ?- ஸ்டாலின் விமர்சனம்

செய்திப்பிரிவு

கரோனாவைத் தடுப்பதிலும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதிலும் தோல்வியடைந்த முதல்வர் பழனிசாமி தலைமையிலான இந்தக் கூட்டம், கிடைத்தவரை சுருட்டிக் கொண்டு ஒடுவதற்குத் தயாராகிவிட்டது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

“கரோனாவைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. கரோனாவால் இறந்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. சென்னையில் மட்டும் 3,396 பேர் நேற்றுவரை இறந்து போயிருக்கிறார்கள். அவர்களது குடும்பத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் முதல்வர்? திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 576 பேர் இறந்துள்ளார்கள். 576 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. என்ன சொல்லப் போகிறார் முதல்வர்?

தினமும் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். 5 ஆயிரம் என்பது என்ன எண்ணிக்கை என்பது தெரியவில்லை. அது 6 ஆயிரமாகவும் ஆகவில்லை. 4 ஆயிரமாகவும் ஆகவில்லை. 5 ஆயிரம் பேர் என்று உத்தேசமாக ஒரு கணக்கைச் சொன்னால் போதும் என்று நினைக்கிறார்கள். ஒரே ஒரு ஆள் பாதிக்கப்பட்டாலும் 'அம்மாவின் அரசு' காப்பாற்றும் என்றார் பழனிசாமி. பத்தாயிரம் பேர் இறந்து போனதற்கு பழனிசாமி என்ன பதில் வைத்துள்ளார்? கரோனாவுக்குத்தான் தெரியும் என்று சொல்லப் போகிறாரா?

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் திருவள்ளூர் மாவட்டம் 4-வது இடத்தில் இருக்கிறது. முதலில் சென்னை, அடுத்தது செங்கல்பட்டு, அடுத்து கோவை, அடுத்தது திருவள்ளூர்தான். இதுவரை 34 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அக்டோபர் மாதம் கரோனா பாதிப்பு அதிகமாகும், நவம்பரில் அதிகமாகும் என்று அதிகாரிகளே பேட்டி தருகிறார்கள். அதிகமாகும் என்றால் அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் என்ன செய்தது? செய்யப் போகிறது?

கரோனாவைத் தடுக்கிறோம் என்ற பெயரால் நடத்தப்பட்ட கொள்ளைகள் அதிகமானதே தவிர கரோனா குறையவில்லை. கரோனாவால் மரணம் அடைபவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான் குறைவு என்பதை ஏதோ தன்னுடைய சாதனையைப் போல பழனிசாமி சொல்லிக்கொண்டு இருந்தார். உண்மை அதுவல்ல.

மரணம் அடைந்தவர் எண்ணிக்கையையே மறைத்து தனக்குத்தானே மரண சாதனைப் பட்டத்தைப் பழனிசாமி சூட்டிக் கொண்டார். ஆனால் இன்றைய நிலைமை என்ன? கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 1.1 விழுக்காடாக இருந்த இறப்பு விகிதம் அண்மைக் காலமாக 1.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மற்ற நோய்ப் பாதிப்பு இல்லாத பலரும் இறந்து வருவதாகச் செய்திகள் கூறுகின்றன. இதுதான் மக்களைக் காக்கும் அழகா?

கரோனா அதிகரித்துக் கொண்டே போனால்தான் கொள்ளையையும் தொடர முடியும் என்று நினைக்கிறதா தமிழக அரசு என்ற சந்தேகம்தான் வருகிறது. மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 8 முறை ஊரடங்கை நீட்டித்துள்ளார்கள். 200 நாட்களாக தமிழகத்தில் ஊரடங்கு உள்ளது. ஆனால் கரோனா கட்டுக்குள் வரவில்லை என்றால் இது கையாலாகாத அரசாங்கம், என்று தானே அர்த்தம்?''.

இவ்வாறு ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

SCROLL FOR NEXT