நாடு முழுவதும் குறிப்பாக சிறுமிகளைக் குறிவைத்து நடத்தப்படும் இந்த வன்கொடுமைகளைச் செய்யும் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனையாக மரண தண்டனையை அளிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே. வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
''திண்டுக்கல் மாவட்டம் குரும்பட்டி கிராமத்தில் உள்ள சவரத் தொழிலாளர் வெங்கடாச்சலத்தின் 12 வயது மகள் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சில கயவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
கடந்த ஒரு வருடமாக மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் இறுதியில், குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்யப்பட்டனர். காலம் கடந்த தீர்ப்பு மறுக்கப்பட்ட தீர்ப்பு என்று கூறுவார்கள். குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிவிடுகின்றனர்.
அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காமல், இழப்பும், மனவேதனையும்தான் மிஞ்சுகிறது. இதனால் நாட்டில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
தமிழகத்தில் மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களிலும் சிறுமிகளை வன்புணர்வு மற்றும் கூட்டு வன்புணர்வு செய்து கொலைசெய்யும் படுபாதகச் செயல் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது. இதுபோன்ற குற்றங்களுக்கு அரசு கடுமையான சட்டங்களின் மூலம் தண்டனைகளைக் கடுமையாக்கினால்தான் பாலியல் கொடுமைகள் ஒழியும். முடிவுக்கு வரும்.
சாட்சிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு வருவதால் பலர் தண்டனையில் இருந்து தப்பிவிடுகின்றனர். தவறு செய்பவர்கள் தடயங்களை விட்டுவிட்டா செல்வார்கள். ஆகவே, அரசு சட்டத்திலும் சில திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும். அதோடு பாலியல் வன்கொடுமையும் அது சார்ந்த கொலைகளுக்குச் சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் உடனடியாகத் தீர்ப்புகள் அளித்து தாமதம் இல்லாமல் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் குறிப்பாக சிறுமிகளைக் குறிவைத்து நடத்தப்படும் இந்த வன்கொடுமைகளைச் செய்யும் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனையாக மரண தண்டனையை அளிக்க வேண்டும்.
திண்டுக்கல் சிறுமியைக் கொலை செய்தவர்கள், விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு அமைப்பினர் இவ்வழக்கை தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்றும், ஆர்ப்பாட்டம், போராட்டம் மூலம் வலியுறுத்தியதின் அடிப்படையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மேல்முறையீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்துள்ளார். இது சிறிது மன ஆறுதலையும், நம்பிக்கையும் தருகிறது''.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.