ஓசூர் அருகே சாலையோரம் தங்கக் காசுகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, இரண்டாம் நாளாக அப்பகுதியில் குவிந்த பொதுமக்கள் தங்கக் காசுகளை தேடினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் பாகலூர் காவலர் குடியிருப்பு எதிரில் சாலையோரம் நேற்று முன்தினம் சிறிய வட்டவடிவில் காணப்பட்ட தங்கக்காசுகள் கிடந்தன. அவ்வழியாக சென்றவர்கள் தங்கக்காசுகளை எடுத்துச் சென்றனர். இந்த தகவல் பரவியதும் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவியத்தொடங்கினர். அனைவரும் அப்பகுதியில் மண்ணைக் கிளறி தங்கக்காசுகளை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். தங்கக்காசுகளை தேடி இரண்டாவது நாளான நேற்றும் பொதுமக்கள் குவிந்ததால் அவ்வழியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த பாகலூர் போலீஸார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் தங்கக் காசுகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கூறும்போது, ‘‘பொதுமக்கள் இதுவரை 200-க்கும் மேற்பட்ட தங்கக் காசுகளை கண்டுபிடித்து எடுத்துச்சென்றுள்ளனர்,’’ என்றனர்.
இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்ட போது,‘‘வருவாய் துறையினர், காசுகள் குறித்து உரிய முறையில் சோதனை செய்த பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும்,’’ என்றனர்.
இதுதொடர்பாக நாணயவியல் ஆய்வாளர் சுகவன முருகன் கூறும்போது, ‘‘பாகலூரில் கிடைத்துள்ள சிறிய வகை தங்க நாணயங்கள் சுமார் 350 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இந்த நாணயங்கள் கி.பி.1650-ம் ஆண்டு பிற்கால விஜயநகர பேரரசு காலத்தில் பாகலூர் பகுதியில் புழக்கத்தில் இருந்தவை. இவை துவரம் பருப்பு அளவிலான மாற்று குறைந்த பொன் நாணயங்களாக உள்ளன. இந்த நாணயங்களில் தெலுங்கு எழுத்து வடிவம் காணப்படுகிறது,’’ என்றார்.ஓசூர் அடுத்த பாகலூரில் தங்கக் காசுகளை தேடும் பொதுமக்கள். (உள்படம்) கண்டெடுக்கப்பட்ட தங்கக் காசுகள்.