தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு காளையை போற்றும் வகையில், தனியார் கல்லூரியில் அமைப்பதற்காக மாமல்லபுரத்தில் 10 டன் எடையுள்ள கருங்கல்லில் காளைகள் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் ஜல்லிக்கட்டு காளைகளும் அதில் களமிறங்கும் மாடுபிடி வீரர்களும் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் தனியார் சிற்பக்கூடத்தில் சீறி வரும்காளைகளின் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சுமார் 5 அடி உயரத்தில், தலா 5 டன் எடையுள்ள கற்களைப் பயன்படுத்தி இச்சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
யானை வரதன் என்ற சிற்பியின் தலைமையில் 5 சிற்பக் கலைஞர்களின் கை வண்ணத்தில் கடந்த 4 மாத காலமாக மிகவும் நேர்த்தியான முறையில் சீறி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வரும் இச்சிலைகள், தத்ரூபமாக அமைந்துள்ளன. சிலை வடிவமைப்பு பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பணிகள் முழுமை பெற்றதும், மாமல்லபுரம் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றுவதற்காக இச்சிலைகள் நிறுவப்பட உள்ளதாக சிற்பக் கலைஞர் யானை வரதன் தெரிவித்துள்ளார்.